மருத்துவச் சேவையில் முத்திரை பதித்த இதய மையம்

செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் (HSIS) இதய மையம், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 69 இதய சிகிச்சை தலையீட்டு வழக்குகளைக் கையாண்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் 10 இதய சிகிச்சை மையங்களில் பதிவான மொத்த வழக்குகளில் இது 45 விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தீவிர சிகிச்சை நடவடிக்கையில் 14 இதய நோய் நிபுணர்கள், 6 மருத்துவ அதிகாரிகள், 10 கதிரியக்கப் படப்பிடிப்பு நிபுணர்கள் மற்றும் 40 செவிலியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 80 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கையாளப்பட்ட 69 வழக்குகளில் 29 அவசர சிகிச்சை வழக்குகளாகும். ஏனையவை திட்டமிடப்பட்ட சிகிச்சைகளாக இருந்தன.

இதில், மாரடைப்பு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உடனடி சிகிச்சை தேவைப்பட்ட 4 முதன்மை பெர்குடேனியஸ் கொரோனரி தலையீட்டு (PCI) சிகிச்சைகளும் அடங்கும்.

மேலும், இரத்தக் குழாய்களின் உட்புறத்தைத் துல்லியமாக ஆய்வு செய்ய உதவும் intravascular ultrasound தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 13 சிக்கலான இதய இரத்தக் குழாய் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.

HSIS இதய மையத்தை “Cardiac Centre of Excellence” என அங்கீகரித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சுகாதார அமைச்சு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இந்த சாதனை, உயர்தர இதய சிகிச்சையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதில் HSIS இதயநோய் சிகிச்சைக் குழுவின் அர்ப்பணிப்பு, திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுவாக, இதய மையத்தின் தினசரி செயல்பாடுகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றன. இதன்போது ஏழு இதய வடிகுழாய் சிகிச்சை அறைகளும் (Cath Labs) முழுத் திறனில் இயங்குகின்றன.

அலுவலக நேரத்திற்குப் பிறகும் நான்கு Cath Labs தொடர்ந்து செயல்பட்டு, சிகிச்சைக்காகக் காத்திருக்கும் மீதமுள்ள நோயாளிகளின் வழக்குகளை விரைவாகக் கையாளுகின்றன.

பகிருங்கள்: