ஈப்போ மருத்துவமனை கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து படுகாயம்; கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

ஈப்போ மருத்துவமனை கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்த நபர்; கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை (HRPB) கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இடம்பெற்றதாக ஈப்போ மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் முஹம்மது நஜிப் ஹம்சா தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின்படி, மருத்துவமனையின் பாதுகாப்பு காவலர் ஒருவர் அவசரப் படிக்கட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டிருந்த ஒருவரைக் கவனித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து சென்றபோது, அந்த நபர் மருத்துவமனை கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்திருப்பது தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவர் உடனடியாக HRPB அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழுந்த நபர் 60 முதல் 70 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஆடவர் என நம்பப்படுகிறது. அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் சிவப்பு நிறக் குறுகிய கை சட்டையும், கருப்பு நிற நீளக் கால்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை அடையாளம் காண உதவும் தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது தங்களது குடும்ப உறுப்பினர் காணாமல் போயிருப்பதாகப் புகார் அளித்தவர்கள், காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பகிருங்கள்: