கெடா மாநிலம், மெர்கோங்கில் கோயில் ஊர்வலத்தில் பங்கேற்றபோது மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 80 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 16 வயது மாணவர் கோர் ஸி காங் (Khor Zhi Kang) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சுல்தானா பஹியா மருத்துவமனையில் அதிகாலை 2.52 மணியளவில் உயிரிழந்ததாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் சையத் பஸ்ரி சையத் அலி தெரிவித்தார்.
மாணவரின் உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் உடற்கூறு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்ற இரு இளைஞர்களில், 20 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 17 வயது இளைஞர் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மற்றொரு இளைஞர் முகம் மற்றும் கைகளில் 40 சதவீத தீக்காயங்களுடன் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கோயில் ஊர்வலத்தின்போது, அவர்கள் ஏந்திச் சென்ற கொடி பிரதான மின்சார விநியோகக் கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
