கூச்சிங், அக்டோபர் 22: சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் உள்ள தனியார் அனைத்துலகப் பள்ளியில், 16 வயது மாணவர் ஒருவர் பெண் ஆசிரியரைச் சிறிய கோடரியால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 21ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், ஆசிரியரின் கையில் காயம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக மாணவரைக் கைது செய்த காவல்துறையினர், சிறிய கோடரி மற்றும் கத்தி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், மாணவர் தாக்குதல் சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருவதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், மூன்று துணைக் காவல் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
