கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), 2026 ஜனவரி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்குகளில் மொத்தம் 2,526.28 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் RM202.76 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பிரிட்டன் நாட்டவர்கள் 26 பேர், மலேசியர்கள் 23 பேர், சிங்கப்பூரர்கள் 11 பேர் மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் 6 பேர் அடங்குவர்.
மொத்த வழக்குகளில் 45 வழக்குகள் விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு முகமை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கையாளப்பட்டன. மேலும், 25 வழக்குகளில் காவல்துறையும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டன.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அதிகாரிகள், வெளிநாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக வருமானம் தருவதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான சலுகைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
மேலும், பொருட்களின் உள்ளடக்கம் தெரியாமல் பிறருக்குச் சொந்தமான பொருட்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
