பாகான் டத்துக்கில் மாணவியிடம் ஆசிரியர் பாலியல் தொல்லை!

ஈப்போ, அக்டோபர் 27, 2026 – பாகான் டத்துக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் தனது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, மாணவியின் தாயார் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகப் பேராக் மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, பிரிவு 15(a)-இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகப் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் அலாவி ஸைனல் அபிடின் தெரிவித்தார்.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் அதிருப்தி அடைந்த ஆசிரியரும் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றவியல் சட்டம் பிரிவு 323 மற்றும் தொடர்பாடல் மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 ஆகியவற்றின் கீழும் விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரவிய சுமார் 50 விநாடிகள் கொண்ட காணொளியில், மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினர் அந்த ஆசிரியரைத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கிடையில், விசாரணை முடிவடையும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாகான் டத்துக் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு (PPD) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடேக் தெரிவித்தார்.

பகிருங்கள்: