பெண் சக ஊழியரைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நேபாள ஆடவர் மீது குற்றச்சாட்டு

பத்து பகாட் : மலேசியாவில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நேபாள நாட்டவர் ஒருவர், 19 வயது பெண் சக ஊழியரைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இன்று பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

29 வயதான கடாக் சிங் தகுன்னா (Khadak Singh Thagunna), கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நண்பகல் 12.40 மணியளவில், ஸ்ரீ காடிங் தொழில்துறைப் பகுதியில் உள்ள மின்னணு உற்பத்தித் தொழிற்சாலையில் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கில் குற்றவியல் பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் 354-ஆவது பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம். இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட பெண் தொழிற்சாலையின் ஓய்வறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சந்தேக நபர் அவரிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுநாள் இரவு சுமார் 9.50 மணியளவில், ஜாலான் குளுவாங்கில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் ஷாஹ்ஸ்லீன் இப்ராஹிம் முன்னிலையானார். குற்றம் சாட்டப்பட்டவருக்காக வழக்கறிஞர் முகமது ரசாக் ஷரீப் ஆஜரானார்.

குற்றச்சாட்டை நேபாள மொழியில் மொழிபெயர்த்து விளக்குவதற்காக மொழிபெயர்ப்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தும் நோக்கில், வழக்கின் மறுஅழைப்பு விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும், இரண்டு உள்ளூர் நபர்களின் பிணையில் RM8,000 தொகையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், பிணைத் தொகையைச் செலுத்தத் தவறியதால், அவர் தற்காலிகத் தடுப்புக்காவலுக்காக மூவார் சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டார்.

பகிருங்கள்: