ஸ்பெயின் ரயில் விபத்து: மோதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவுகளை வெளிப்படுத்திய ஒலிப்பதிவுகள் – 69 பேர் பலி!

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரயில் கட்டுப்பாட்டு மையத்திற்கும் ரயில் ஓட்டுநர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

வெளியான ஒலிப்பதிவுகளின்படி, ரயில் பாதையில் முன்னால் ஒரு ரயில் நிறுத்தப்பட்டிருந்தபோதும், அரசுக்குச் சொந்தமான Renfe அதிவேக ரயிலை வழக்கமான வேகத்தில் தொடர்ந்து செல்ல கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது.

புதன்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் கணினி கோளாறு காரணமாக ரயில் பாதுகாப்பு அமைப்பு செயலிழந்ததாக ஸ்பெயின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஒஸ்கார் புவென்டே தெரிவித்துள்ளார். இதனால் அந்த வழித்தடத்தில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ரயில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மாட்ரிட்டில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை 8.36 மணியளவில், முன்னால் தனியார் நிறுவனமான Iryo-வின் ரயில் நிறுத்தப்பட்டிருந்தபோதும், Renfe ரயிலை வேகக் கட்டுப்பாடின்றி வழக்கமான வேகத்தில் பயணத்தைத் தொடர கட்டுப்பாட்டு மையம் அனுமதித்ததாக அமைச்சர் கூறினார். இது நடைமுறைக்கு மாறான தவறான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒலிப்பதிவுகளின்படி, Iryo ரயிலின் ஓட்டுநர் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, ரயிலை மீண்டும் இயக்க முடியவில்லை என்றும், அது இன்னும் நுழைவு சிக்னல் அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரச்சினை தீர்ந்ததும் ரயிலை இயக்குமாறும், மீண்டும் சிக்கல் ஏற்பட்டால் தொடர்புகொள்ளுமாறும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு Renfe ரயில், முன்னால் நின்றுகொண்டிருந்த Iryo ரயிலின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்து காலை 8.53 மணியளவில் உர்டா ரயில் நிலையத்திற்கு அருகே நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 67 பயணிகளைக் காணவில்லை என்று ஸ்பெயின் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்திருந்தனர். விபத்துக்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்க வாய்ப்பு இருந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெளியான ஒலிப்பதிவுகளின் உண்மைத்தன்மையை NBC News சுயமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த விபத்து ஸ்பெயினில் பல ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் அமைச்சர் பாத்திமா பானெஸ் மற்றும் ரயில் ஓட்டுநர் அன்டோனியோ அசெடோ ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்பெயினில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த அமெரிக்கரான டிர்க் லோரன்ஸ், மோதலின்போது தான் மேசையின் மீது பலமாகத் தூக்கி வீசப்பட்டதாகவும், ரயிலின் கூரை சேதமடைந்து தூசி பரவியதாகவும் தெரிவித்துள்ளார். பயணிகள் பலர் அதிர்ச்சியில் இருந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு மற்ற பயணிகள் உதவியதாகவும் அவர் கூறினார்.

மேலும், விபத்து குறித்து ஸ்பெயின் அரசாங்கம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிருங்கள்: