கடற்கரை மணலில் நொறுக்கிய சிப்பிகளைச் சேர்ப்பதன் மூலம், கடல் அமிலமயமாதலால் சிப்பி உருவாக்கும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்பதை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் (UC Davis) வளாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிளிஞ்சல்கள், சிப்பிகள் மற்றும் மஸ்ஸல்ஸ் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தங்களுக்கான ஓடுகளை உருவாக்குவதற்கு கடல் அமிலமயமாதல் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், நொறுக்கிய சிப்பிகளை மணலில் கலப்பது அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், அமிலமயமாதலின் தாக்கத்தையும் குறைக்கிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு Biogeosciences என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் போடேகா கடல் ஆய்வகத்தில் (Bodega Marine Laboratory) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது, நொறுக்கிய சிப்பித் துண்டுகள் மணலுடன் கலக்கப்பட்டு, அந்த மணலில் பசிபிக் லிட்டில்நெக் வகையைச் சேர்ந்த இளம் கிளிஞ்சல்கள் வளர்க்கப்பட்டன. தொடர்ந்து 90 நாட்கள் அவற்றின் வளர்ச்சியும், மணல் துகள்களுக்கு இடையே தேங்கியுள்ள நீரின் வேதியியல் தன்மையும் கண்காணிக்கப்பட்டன.
ஆய்வின் முடிவில், மணலில் நொறுக்கிய சிப்பிகளைச் சேர்ப்பது, மணல் துகள்களுக்கு இடையே உள்ள நீரின் அமிலத்தன்மையைக் குறைப்பது தெரியவந்தது. இதனால், இளம் கிளிஞ்சல்கள் தங்களின் ஓடுகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கலிபோர்னியா மாநில நீர்வள வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான ஹன்னா கெம்ப்ஃப் கூறுகையில், நொறுக்கிய சிப்பிகள் கலந்த மணலில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்கள் சராசரியாக பெரிய ஓடுகளை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், மரபணு அளவிலும் கடல் அமிலமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெருமளவில் குறைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வின் மூலம், நொறுக்கிய சிப்பிகள் உள்ளூர் அளவில் கடல் அமிலமயமாதலின் தாக்கத்தைக் குறைத்து, கிளிஞ்சல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பழங்குடியின மக்கள் நீண்டகாலமாக கடற்கரை மணலில் சிப்பித் துண்டுகளைச் சேர்த்து, கடலோரச் சூழலியலைப் பாதுகாக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். அந்தப் பாரம்பரிய நடைமுறை அறிவியல் ரீதியாக ஏன் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
“மரபணு அடிப்படையில் இந்தக் கேள்வியை ஆராய்வது இதுவே முதல் முறை” என ஆய்வின் தொடர்புடைய ஆசிரியரும், UC Davis பல்கலைக்கழகத்தின் புவி மற்றும் கோள அறிவியல் துறை இணைப் பேராசிரியருமான டேவிட் கோல்ட் தெரிவித்தார்.
கடல் அமிலமயமாதல் கடல்வாழ் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது?
வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் கடல் நீர் அதிக அளவில் உறிஞ்சுவதால் கடல் அமிலமயமாதல் ஏற்படுகிறது.
இதனால் கடல் நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், சிப்பி மற்றும் ஓடுகளை உருவாக்கும் உயிரினங்கள் அவற்றை உருவாக்குவதற்குக் கூடுதல் ஆற்றலைச் செலவிட வேண்டியுள்ளது. சில நேரங்களில், அமிலத்தன்மை அதிகமான கடல் நீர் ஏற்கெனவே உருவான ஓடுகளையும் கரைத்துவிடும்.
குறிப்பாக, இளம் உயிரினங்களும் கடல்வாழ் உயிரினங்களின் லார்வா பருவமும் இந்தப் பாதிப்புகளுக்கு அதிகம் உள்ளாகக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நொறுக்கிய சிப்பிகள் எவ்வாறு அமிலமயமாதலின் தாக்கத்தைக் குறைக்கின்றன என்பதை அறிய, ஆராய்ச்சியாளர்கள் இளம் பசிபிக் லிட்டில்நெக் கிளிஞ்சல்களை நான்கு வெவ்வேறு சூழல்களில் வளர்த்தனர்.
- சாதாரண கடல் நீர் மற்றும் மணல்.
- அமிலத்தன்மை அதிகரிக்கப்பட்ட கடல் நீர் மற்றும் மணல்.
- சாதாரண கடல் நீர், மணல் மற்றும் நொறுக்கிய சிப்பிகள்.
- அமிலத்தன்மை அதிகரிக்கப்பட்ட கடல் நீர், மணல் மற்றும் நொறுக்கிய சிப்பிகள்.
90 நாட்கள் நடைபெற்ற ஆய்வில், வாரத்திற்கு மூன்று முறை கடல் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் அமிலத்தன்மை, உப்புத்தன்மை, வெப்பநிலை மற்றும் கரைந்த ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்பட்டன.
அதேபோல், கிளிஞ்சல்களின் ஓடு வளர்ச்சியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆய்வின் 90ஆவது நாளில், அவற்றின் உடலில் உள்ள மேன்டில் (Mantle) திசுக்கள் சேகரிக்கப்பட்டு மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், நொறுக்கிய சிப்பிகள் கலந்த மணலில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்கள் சராசரியாக பெரிய அளவில் வளர்ந்திருந்தன. மேலும், அமிலத்தன்மை அதிகரிக்கப்பட்ட நீரில் நொறுக்கிய சிப்பிகளுடன் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்களின் மரபணு வெளிப்பாட்டு மாற்றங்கள், சாதாரண கடல் நீரில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்களுடன் பெரும்பாலும் ஒத்திருந்தன.
“நொறுக்கிய சிப்பிகளைச் சேர்ப்பதன் மூலம், அமிலத்தன்மை அதிகமான நீரில் இளம் கிளிஞ்சல்கள் வளரும்போது ஏற்படும் எதிர்மறையான மரபணு மாற்றங்கள் நீக்கப்பட்டன” என்று டேவிட் கோல்ட் தெரிவித்தார்.
பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவியலுக்கு அங்கீகாரம்
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சாண்டா குரூஸ் வளாக மானுடவியல் துறை இணைப் பேராசிரியருமான சிம் ஷ்னைடர், சிப்பித் துண்டுகளைப் பயன்படுத்துவது கடல்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது என்பதற்குப் பாரம்பரிய சூழலியல் அறிவில் ஏராளமான சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வடமேற்கு பசிபிக் கடலோரப் பகுதிகளில், சில பழங்குடியின சமூகங்கள் கடலின் அலை ஏற்ற இறக்கப் பகுதிகளை விரிவுபடுத்தும் வகையில் பெரிய அளவிலான கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன. இதன் மூலம், முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு ஏற்ற வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த ஆய்வு பழங்குடியின சமூகங்களுடன் இணைந்து, அவர்களின் நீண்டகால அனுபவ அறிவையும் பாரம்பரிய அறிவியலையும் பாதுகாக்கும் திட்டங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஷ்னைடர் தெரிவித்தார்.
மேலும், கலிபோர்னியா போன்ற பகுதிகளில் கிளிஞ்சல்கள் வாழும் மணற்பரப்புகளில் சிப்பித் துண்டுகளைச் சேர்க்கும் பாரம்பரியம் இருந்திருந்தால், மறைந்து வரும் கலாசார அறிவையும் கடலோரப் பாதுகாப்பு நடைமுறைகளையும் மீண்டும் உயிர்ப்பிக்க மேற்கத்திய அறிவியல் உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வு, நவீன அறிவியலும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவும் இணைந்து செயல்படுவதன் மூலம் கடலோரச் சூழலியலைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை உருவாக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
