கோலாலம்பூர், நவம்பர் 5: மாசுபட்டதாகக் கூறப்படும் RON95 பெட்ரோலைப் பயன்படுத்தியதால் வாகனங்களின் எஞ்சின்கள் சேதமடைந்ததாகப் புகார் அளித்த வாகனமோட்டிகளுக்கு Caltex மற்றும் Petron நிறுவனங்கள் நிவாரணத் தொகை வழங்கத் தொடங்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகளிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட புகார்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டங்களை இரு நிறுவனங்களும் ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடுப்பனவுகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், இத்தொகையை வழங்குவது நிறுவனங்கள் தங்களது தவறையோ அல்லது சட்டரீதியான பொறுப்பையோ ஒப்புக்கொள்வதாகக் கருதப்படாது என்றும் அவர் விளக்கினார்.
முழுமையான புகார்களைச் சமர்ப்பித்து, அவற்றுக்கான செல்லுபடியாகும் ஆதார ஆவணங்களையும் வழங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
RON95 பெட்ரோல் மாசுபாடு தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகளுக்கு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கோலா கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இழப்பீட்டில் திருப்தியில்லாதவர்கள் என்ன செய்யலாம்?
நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகையில் திருப்தியடையாத வாகனமோட்டிகளுக்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் முறையான புகார்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், தங்களுக்கான உரிய இழப்பீட்டைப் பெறுவதற்காக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் அல்லது மலேசிய நுகர்வோர் உரிமைகோரல் தீர்ப்பாயத்தையும் (Tribunal for Consumer Claims Malaysia) நாடலாம் என அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் மாசுபாடு காரணமாக வாகன எஞ்சின்கள் சேதமடைந்ததாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கான இழப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
