இடிபாடுகளில் இருந்து மின்சாரம்! காசா மக்களின் இருளைப் போக்கும் முன்னாள் பொறியியல் மாணவரின் அசாத்திய முயற்சி

கான் யூனிஸ், நவம்பர் 5 : காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நெரிசலான கூடார முகாம்களுக்கு மேலே, பழைய உலோகப் பொருட்கள் மற்றும் இடிபாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட சிறிய காற்றாலைகள் கடற்காற்றில் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. போர் காரணமாக மின்சார வசதியின்றித் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு இந்த எளிய கண்டுபிடிப்பு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில், முன்னாள் பொறியியல் மாணவரான கமால் அல்-தபாரி தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

காசாவின் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதுடன், கடுமையாகச் சேதமடைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பின் மூலம் நேரடியாக மின்சாரத்தைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

உலக வங்கியின் தகவலின்படி, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் காசாவின் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத் திறனில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலியத் தாக்குதல்களில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்தபோது அழிந்துள்ளன.

தரையில் அமர்ந்தபடி, பிளாஸ்டிக் மேசை ஒன்றின் மீது மின் கம்பிகள், உலோகப் பாகங்கள் மற்றும் எளிய கருவிகளைப் பயன்படுத்தி தபாரி தனது மின்சாரக் கட்டமைப்பைச் சீரமைத்துக் கொண்டிருந்தார்.

கம்பிகளை ஒன்றோடொன்று இணைத்து, மின்னழுத்தத்தை அளவிடும் கருவியின் மூலம் பரிசோதித்த பின்னர், சிறிய மின்விளக்கு ஒன்று ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு விளக்கும் ஒளிரத் தொடங்கியது. இதன் மூலம் மின்சாரம் சீராகப் பாய்வதை அவர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள 60 வயதான தபாரி AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்:

“சூரிய மின்கலத் தகடுகள் ஓரளவு குறைந்த விலையில் கிடைத்தபோது, ஒன்றை வாங்கி சூரிய ஒளி கிடைக்கும் திசைக்கு ஏற்ப இடம் மாற்றிப் பயன்படுத்தி வந்தோம்.

“ஆனால், மூன்று ஆண்டுகளாகத் தொடரும் போரின் காரணமாக நிலைமை மாறிவிட்டது. இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கடப்புகள் வழியாக மனிதாபிமான உதவிகளும் வர்த்தகப் பொருட்களும் குறைந்த அளவிலேயே உள்ளே வருகின்றன. இதனால் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன.

“தற்போது ஒரு சூரிய மின்கலத் தகட்டின் விலை சுமார் 5,000 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான காசா மக்களால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாது,” என்றார்.

காற்றிலிருந்து மின்சாரம் – புதிய முயற்சி

“கடந்த மூன்று ஆண்டுகளாக எங்களுக்கு வேலையும் இல்லை, வருமானமும் இல்லை.

“அப்போதுதான் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ஏன் காற்றின் சக்தியைப் பயன்படுத்தக்கூடாது என்று சிந்தித்தோம். அதற்காக இடிபாடுகளிலிருந்து பயன்படுத்தக்கூடிய பொருட்களைச் சேகரித்தோம்,” எனத் தபாரி தெரிவித்தார்.

இந்தச் சிறிய காற்றாலைகளை உருவாக்குவதற்கு பழைய ஸ்கூட்டர்களின் மின்மோட்டார்கள் மற்றும் பழைய நீர்த்தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்த்தாங்கிகள் வெட்டப்பட்டு காற்றாலை இறக்கைகளாக மாற்றப்படுகின்றன.

காற்றின் வேகத்தால் இறக்கைகள் சுழலும்போது, அவை மின்மோட்டாரை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. பின்னர், அழிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட மின்னணுப் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மின்சுற்றுகள் வழியாக மின்சாரம் செலுத்தப்பட்டு, மின்கலங்களில் சேமிக்கப்படுகிறது.

இதன் மூலம் கைத்தொலைபேசிகளை மின்னேற்றுதல், மின்விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை இயக்குதல், மின்சாரச் சவரக்கத்திகளைப் பயன்படுத்துதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது.

கூடாரங்களிலும் தற்காலிக முகாம்களிலும் வாழும் குடும்பங்களுக்கு இத்தகைய வசதிகள் தற்போது பெரும் ஆடம்பரமாகவே மாறியுள்ளன.

போர் தொடங்கியதிலிருந்து காசாவின் ஏறத்தாழ அனைத்து மக்களும் குறைந்தது ஒருமுறையாவது தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது பெரும்பாலான மக்கள் ஹமாஸின் ஆட்சியின் கீழ் உள்ள சிறிய நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர். அதேவேளை, காசாவின் எல்லைப் பகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூரில் அபு அய்மான் என அழைக்கப்படும் தபாரி மேலும் கூறுகையில்:

“இந்தக் காற்றாலைகள் எங்களுக்கு நம்பிக்கையுடன் வாழ உதவுகின்றன. இந்தத் துயரத்திலிருந்து இறைவன் எங்களை மீட்டு, மீண்டும் எங்கள் வீடுகளுக்குத் திரும்பும் நாள் வரை இவை எங்களுக்கு ஆதரவாக இருக்கும்,” என்றார்.

மருத்துவத் தேவைகளுக்கும் உதவும் மின்சாரம்

இந்தக் காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருந்தாலும், அடிப்படை வசதிகளுக்கே தட்டுப்பாடு நிலவும் முகாம்களில் ஒவ்வொரு மின்சக்தி அலகும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

50 வயதான சாலே பென் ஹசன் கூறுகையில், இந்த மின்சாரக் கட்டமைப்பு தங்களது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

காசாவில் மருத்துவச் சேவைகள் மற்றும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக உள்ள நிலையில், மருத்துவ உபகரணங்களை இயக்குவதற்கும் இந்த மின்சாரம் உதவுகிறது.

“நள்ளிரவில் ஒரு குழந்தைக்கு மருந்தை உள்ளிழுக்க உதவும் நெபுலைசர் (Nebulizer) கருவி தேவைப்பட்டால், நாங்கள் வேறு யாரிடம் உதவி கேட்க முடியும்?

“மின்சாரம் எங்களுக்கு மிகவும் அவசியம். அதனால் எங்களது சகோதரர் அபு அய்மானை நாடுகிறோம்,” என்றார்.

போரினால் அனைத்தையும் இழந்து அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் காசா மக்களுக்கு, இடிபாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறிய காற்றாலைகள் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கின்றன.

பகிருங்கள்: