புந்தோங்,செப்26: வாழ்க்கையில் நன்நிலைக்கு உயர வேண்டுமானால் சவால்களை எதிர்கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு துள்சி மனோகரன் நினைவுறுத்தினார்.
நாட்டின் உருமாற்றத்திற்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வியே மூலதனம் என்றும் கூறிய அவர் மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் கல்வியில் தீவிர முனைப்பும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.
புந்தோங்கைச் சார்ந்த மாணவி கஜனேஸ்வரி தனது உயர்க்கல்வியை மெட்ரிக்குலேசன் கல்லூரியில் கணக்கியல் துறையில் மேற்கொண்டிருக்கும் நிலையில் அம்மாணவிக்கு மடிக்கணினி அன்பளிப்பு செய்த பின்னர் துள்சி மனோகரன் இவ்வாறு கூறினார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தொடர் முயற்சியால் நிச்சயம் மாணவர்களால் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும்,புந்தோங் சட்டமன்றத்தைப் பொருத்தமட்டில் கல்வி சார்ந்த முன்னெடுப்புகளில் தாம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான பங்களிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக வழங்கியும் வருவதாக கூறினார்.
மாணவி கஜனேஸ்வரி மட்டுமின்றி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் முடித்து உயர்கல்வியில் கால் பதிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக பி40 மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான மடிக்கணினி உட்பட கல்வி உபகரணங்களையும் சட்டமன்ற சேவை மையத்தின் வாயிலாக வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக மிக அண்மையில் இங்குள்ள சங்கீதசபா தமிழ்ப்பள்ளிக்கு நாற்காலி,மேசைகள்,அலுவலக தளவாடப் பொருட்கள் என சுமார் வெ. 24 ஆயிரத்து நிறைவு செய்யப்பட்டதாக கூறிய அவர் கடந்த 2024ஆம் ஆண்டில் பள்ளிச்சிற்றுண்டிச்சாலைக்கு தேவையான மேசை,நாற்காலிகளை வெ.18 ஆயிரத்துக்கு தனது சேவை மையம் வாயிலாக நிறைவு செய்யப்பட்டதையும் மாண்புமிகுந்துள்சி மனோகரன் நினைவுக்கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
