காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தொடர் திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.சீனா–நேபாள எல்லையில் அமைந்துள்ள கிரோங் சோதனைச் சாவடி வெள்ளத்தில் முற்றாக அழிந்ததுடன், திரிசூலி ஆற்றின் 72 கிலோமீட்டர் நிலப்பகுதியில் அமைந்திருந்த பல குடியிருப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரழிவில் நேபாளத்தில் இதுவரை 987 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,916 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் (Tibet Autonomous Region) மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 546 பேர் காணாமல் போயுள்ளனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரின் உடல்கள் சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ராசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா மற்றும் சித்வான் உள்ளிட்ட நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரழிவுக்கு காரணமாக, இமயமலையில் உள்ள லாங்டாங் லிருங் பகுதியில் பனிப்பாறை சரிவு ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிகழ்வுகள் 5.2 மெக்னிடியூட் அதிர்வை உருவாக்கியதாகவும், அந்த அதிர்வு உலகம் முழுவதும் உள்ள நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளால் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேபாளம் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை எதிர்கொண்டு வருகிறது.
