ஜோகூர்: கண்ட்ரி கார்டன் அருகே உள்ள லிடோ கடற்கரைப் பகுதியில் சுமார் 1.2 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த லாலாங் புல்வெளியில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது.
இரவு நேரத்தில் தீப் பிழம்புகள் வேகமாக உயர்ந்து வானத்தை ஒளிரச் செய்ததால், அருகிலுள்ள உயரமான ஆடம்பரக் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் அச்சமடைந்தனர்.
நேற்று இரவு 9.06 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, லார்கின் மற்றும் தெப்ராவ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவல் கிடைத்த சுமார் 14 நிமிடங்களில் தீயணைப்பு குழுவினர் அங்கு சென்றடைந்தனர்.
மொத்தம் 6 தீயணைப்பு வீரர்கள், அருகிலிருந்த நீர்வாயிலுடன் இணைக்கப்பட்ட சுமார் 122 மீட்டர் நீளமுள்ள குழாயைப் பயன்படுத்தி, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ தொடர்ந்து பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றிய பகுதிகளை முழுமையாக கண்காணித்து, நீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
சுமார் இரவு 11.35 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
