திரங்கானு, டுங்குன் அருகே பந்தார் அல் முக்தாஃபி பில்லா ஷா (AMBS) பகுதியில் உள்ள குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாத பெண் குழந்தை மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டுங்குன் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிண்டெண்ட் நிக் அப்துல் ஹலிம் நிக் மாட் கூறுகையில், இன்று பிற்பகல் 3.41 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.
குழந்தையை அவரது தாய் காலை 8 மணியளவில் நல்ல உடல்நிலையில் பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலை 10 மணியளவில் குழந்தை தூங்கி எழுந்து பால் குடித்த பின்னர், மைய ஊழியர்கள் குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளனர்.
உடனடியாக குழந்தை டுரியான் மாஸ் சுகாதார கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டுங்குன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. மருத்துவர்கள் CPR உள்ளிட்ட அவசர சிகிச்சைகளை மேற்கொண்ட போதிலும், மதியம் 12.45 மணியளவில் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் ஆரம்பப் பரிசோதனையில் கண்டறியப்படவில்லை. எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.
மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த இரு பராமரிப்பாளர்களிடமும், குழந்தையின் பெற்றோர் மற்றும் தொடர்புடைய சாட்சிகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெறவுள்ளனர்.
குழந்தை பராமரிப்பு மையத்தில் அலட்சியம் அல்லது கைவிடப்பட்டதற்கான காரணிகள் இருந்தனவா என்பதை கண்டறிய, சிறார் சட்டம் 2001-ன் பிரிவு 31(1)(a)-ன் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
