சட்டம் அனைவருக்கும் சமம் – குற்றவாளிகள் மீது கட்சிப் பாகுபாடின்றி நடவடிக்கை: முதல்வர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமை சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் திமுகவுக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.

மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களை முன்வைத்து திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

“காவல்துறை நல்லவர்களுக்கு நண்பனாகவும், குற்றவாளிகளுக்கு எதிரியாகவும் செயல்பட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம்,” என அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதங்களில் நடந்த குற்றச் சம்பவங்கள் அனைத்தும் ஒரே காரணத்தால் நடைபெறவில்லை என்றும், பழைய பகை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளே சில சம்பவங்களுக்கு காரணம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’ அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக தமது அரசு ‘Zero Tolerance’ கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் முதல்வர் விஜய் கூறினார்.