பிலிப்பைன்ஸின் பலாவான் மாகாணத்தில், பிரபல சுற்றுலாத் தலமான கொரோன் அருகே படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததோடு, 87 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மாலை, கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த M/V June Aster என்ற படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 38 பயணிகளும் 4 பணியாளர்களும் அடங்குவர்.
அந்தப் படகில் மொத்தம் 134 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மணிலாவில் இருந்து புறப்பட்ட படகு, பலாவான் மாகாணத்தில் உள்ள கொரோன் அருகே சென்றுகொண்டிருந்தபோதே தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளுடன், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
