புக்கிட் மெர்தாஜாம்: நிபோங் திபாலில் உள்ள வீடொன்றின் செப்டிக் தொட்டியில் 52 வயதுடைய ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் நான்கு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
25 முதல் 35 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை, இன்று முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சவிந்தர் சிங் ஜுகிந்தர் சிங் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களில் மூவர் மலேசியர்கள். அவர்களில் அந்த வீட்டின் உரிமையாளரும் அடங்குவார். மேலும், மியன்மாரைச் சேர்ந்த ஒரு ஆடவர் மற்றும் ஒரு பெண் என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
நிபோங் திபால், தாமான் செரி பிஸ்தாரியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பின்புறம் அமைந்துள்ள செப்டிக் தொட்டியில், சுமார் இரண்டு நாட்களாக இருந்ததாக நம்பப்படும் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 5 மலேசியர்களும், 5 மியன்மார் நாட்டினரும் அடங்குவர்.
