இணைய மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக சிறப்புப் பணிக்குழு மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் முடிவுகள் விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
வர்த்தக வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிக் டாக் உள்ளிட்ட முக்கிய டிஜிட்டல் தள நிறுவனங்கள் இந்த ஆலோசனைகளில் முதன்முறையாக ஒன்றிணைந்து பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதுள்ள சட்டங்களில் காணப்படும் இடைவெளிகளை அடையாளம் காண்பதுடன், இணைய மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமலாக்க அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இணைய மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த சிறப்புப் பணிக்குழுவும் தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக ஃபாஹ்மி ஃபாட்சீல் கூறினார்.
