நாடு முழுவதும் நடைபெறும் ஹரி சுசி மலேசியா (HCM) 2026 நிகழ்வில் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்பதுடன், 28,000 கிலோ மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைச் சேகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட HCM நிகழ்வில் பொதுமக்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அந்த வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க இந்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி, பள்ளி மாணவர்களைத் தவிர்த்து 95,000க்கும் மேற்பட்டோர் இணையம் வழியாகப் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 469 இடங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டு HCM மூன்று மலேசிய சாதனைப் புத்தக (Malaysia Book of Records) சாதனைகளைப் பதிவு செய்தது. ஒரே நேரத்தில் 58,007 பேர் பங்கேற்றது, ஒரே நாளில் 4,645 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டது மற்றும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு, ஒரே நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதுடன், ஒரே நாளில் 27,600 கிலோவுக்கும் அதிகமான பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

இவ்வாண்டு முதன்முறையாகக் கல்வி அமைச்சு HCM-ன் மூலோபாய பங்காளியாக இணைந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 10,000 பள்ளிகள் பங்கேற்கின்றன. HCM நடவடிக்கைகள் மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கான PAJSK மதிப்பீட்டிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கழிவு மேலாண்மையை மேம்படுத்த அரசாங்கம் 9R அணுகுமுறையை வலுப்படுத்தி வருகிறது. இதில் மறுப்பது, மறுபரிசீலனை செய்வது, குறைப்பது, மீண்டும் பயன்படுத்துவது, பழுதுபார்ப்பது, புதுப்பிப்பது, மறுஉற்பத்தி செய்வது, வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது, மறுசுழற்சி செய்வது மற்றும் மீட்டெடுப்பது ஆகியவை அடங்கும்.
தூய்மை குறித்த கலாசாரத்தை பள்ளி பருவத்திலேயே உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஙா கோர் மிங், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கத்தை மாணவர்களிடையே வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் சுமார் 1,000 வணிக வளாகங்கள் மறுசுழற்சி பொருட்களைச் சேகரிக்கும் வசதிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“மலேசியாவைத் தூய்மையாகவும் வளமான நாடாகவும் வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் பங்களிப்பும் அவசியம்,” என ஙா கோர் மிங் வலியுறுத்தினார்.
