நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் நீக்கம் ஜனநாயகத்திற்கு உட்பட்டதே – டத்தோ சிவநேசன் நினைவுறுத்து!!
ஈப்போ,செப்25: நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கியதும் அவர்களை ஆட்சிக்குழு அலுவலகத்துக்குள் அனுமதிக்க மறுத்ததும் சட்ட ரீதியிலானது.அது ஒருபோதும் ஜனநாயகத்தை மீறிய செயல் அல்ல.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்தது அம்மாநில ஆட்சியாளர் துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிர் அவர்கள் சம்மதப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களை நீக்கியதும் சட்ட ரீதியிலானது தான்.அதனை மறுக்கவோ அல்லது துவாங்குவின் நடவடிக்கை எதிர்த்து ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகம் நுழைய முற்படுவதும் தான் ஜனநாயக மீறல் என்றார் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் அவர்கள்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் அண்மையில் ஜனநாயக முறையில்தான் நடந்தேறியது.மக்கள்.வாக்களித்து தேசிய முன்னணி வென்றதும் ஜனநாயகத்தன்மையில் தான் அமைந்திருந்தது.
வெற்றி பெற்ற தேசிய முன்னணி சார்பாக மாநில மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லசிம் துவாங்கு
முக்ரிஸ் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக 10 சட்டமன்ற உறுப்பினர்களை மந்திரி பெசார் துவாங்கு முக்ரிஸ் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து அந்தப் பத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களாகப் பதவி நியமனம் எடுத்து கொண்டனர்.
இவையெல்லாம் ஜனநாயக நிலையில் தான் நடந்தேறியது என்பதை நினைவுறுத்திய பேரா மாநில சுகாதாரமனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ சிவநேசன் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பதிவுயேற்றவர்கள் மாநில ஆட்சியாளரை நீக்குவதற்கு கையொப்பம் இட்டதுதான் ஜனநாயக மீறல் என்றும் அது சட்டத்திற்கு எதிரானது என்றும் சுட்டிக்காண்பித்தார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ஆட்சியாளரால் நீக்கப்பட்ட சம்மதப்பட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக்குழு அலுவலகம் நுழைய தகுதி இழந்து விட்டனர்.அவர்கள் ஆட்சிக்குழு சார்ந்து எந்த நடவடிக்கைகளிலும் ஈடுப்பட முடியாது.ஆட்சிக்குழு வாகனத்தைக் கூட பயன்படுத்த முடியாது என்பதையும் சிவநேசன் விளக்கினார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் நாட்டில் முதன்முறையாக பெரும் அரசியல் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது.அதில் பேரா மாநிலம் முதன்முறையாக தேசிய முன்னணி வசமிருந்து பாக்காத்தான் ரக்யாக் கூட்டணி வசமானது.அதன் பின்னர் நிலவிய அரசியல் மாற்றத்தால் அப்போதைய மந்திரி பெசார் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பதவி இழக்கும் சூழல் ஏற்பட்ட போது ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாகனங்கள் உட்பட ஆட்சிக்குழுவை சார்ந்த அனைத்து பொருட்களையும் மாநில செயலகத்தில் திரும்ப ஒப்படைத்தோம் என்று அன்றைக்கும் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த சிவநேசன் நினைவுக்கூர்ந்தார்.
எனவே,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான வரையறை உரிமைக் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூறிய டத்தோ சிவநேசன் இதற்கிடையில், நெகிரி செம்பிலான் மாநில செயலாளர்,சட்ட ஆலோசகர் மற்றும் நிதியாளரை இடைநீக்கம் செய்வதாக மாநில மந்திரி பெசாரின் அறிவிப்பும் ஏற்புடையதல்ல என்றார்.
ஆம்மூவரை நீக்கவோ,இடைநீக்கம் செய்யவோ மாநில மந்திரி பெசாருக்கு உரிமை இல்லை என்பதையும் வழக்கறிஞருமான அவர் சுட்டிக்காண்பித்தார்.
அம்மூவரும் மத்திய அரசாங்கத்தின் நியமனம் பெற்றவர்கள்.அவர்களை மாற்றம் செய்யவும் நீக்கமும் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்றார்.
நெகிரி செம்பிலான் மாநில விவகாரத்தில் ஜனநாயக ரீதியிலும் சட்டம் சார்ந்தும் அனைவரும் தெளிவான அறிக்கைகளை வெளியிட வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிக்கைகளால் மக்களை குழப்பக்கூடாது என கேட்டு கொண்ட டத்தோ சிவநேசன் அம்மாநிலத்தில் சம்மதப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் துவாங்கு முக்ரிஸ் நீக்கியது ஜனநாயகத்திற்கு உட்பட்டதே எனவும் குறிப்பிட்டார்.
அவர்களின் பதவி நீக்கத்தை இரத்து செய்யும் அதிகாரமும் துவாங்கு வசம் மட்டுமே உள்ளது.அவர்களை ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்த துவாங்குவே அவர்களைப் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளார்.
ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கவும் சட்டத்தை உணர்ந்து ஏற்கும் நிலையிலும் சம்மதப்பட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களும் பிடிவாதம் பிடிக்காமல் ஆட்சிக்குழு உறுப்பினர் சார்ந்த அனைத்து விவாகாரத்திலிருந்தும் ஒதுங்கிக் கொள்வதே விவேகமான நடவடிக்கையாகும் என்றும் டத்தோ சிவநேசன் தனது கருத்தையும் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
