லாவோஸில் 521 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சுபாங் விமான நிலையத்தில் விமானி உட்பட 4 பேர் கைது

சுபாங் விமான நிலையத்தில் தனியார் விமானம் மூலம் லாவோஸிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லவிருந்த நிலையில், விமானி உட்பட 4 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 49 வயதுடைய மலேசிய விமானி, துணை விமானி மற்றும் இரண்டு பெண் விமானப் பணியாளர்கள் அடங்குவர்.

லாவோஸில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தனியார் விமானம் ஒன்றிலிருந்து 521 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த கைது தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுபாங் விமான நிலையத்தில் இருந்து லாவோஸ் சென்றிருந்த அந்த விமானம், பின்னர் போதைப்பொருளுடன் லுவாங் பிரபாங் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக லாவோஸ் அதிகாரிகள் மலேசிய துணை விமானி ஒருவரையும் உள்ளடக்கிய 13 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இதனிடையே, சுபாங் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 49 வயது விமானி, சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்தின் உரிமையாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் மலேசியாவைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள தொடர்பைக் கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்: