இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் நட்சத்திர ஹோட்டலில், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத ஊழியர் ஒருவரை விருந்தினர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த காந்தி என்ற ஊழியர், விருந்தினருக்கு உணவு பரிமாறியபோது மொழிப் புரிதலில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விருந்தினர் கன்னத்தில் அறைந்தபோதும் காந்தி அமைதியாக இருந்ததுடன், நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து அறிந்த தாஜ் ஆக்ரா ஹோட்டல் இயக்குநர் பரிதோஷ் லதானி, ஊழியரைத் தாக்கிய விருந்தினருக்கு தாஜ் ஹோட்டல்களில் வாழ்நாள் முழுவதும் நுழையத் தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், காந்தி தனது பணியை மதிப்பதால் அவமானத்தைப் பொறுத்துக்கொண்டதாகக் கூறியதை அறிந்து வருத்தமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்த ஹோட்டல் நிர்வாகத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மொழித் திறன் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பணியாளரும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் வலியுறுத்துகிறது.
