கோலாலம்பூர் : மலேசியாவின் புதிய தளர்த்தப்பட்ட ஏற்றுமதி விதிகளின் கீழ், அமெரிக்காவுக்கு அரிய மண் கனிமங்களை ஏற்றுமதி செய்ய ‘DTEC Mineral and Metal Technology’ நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இந்த அனுமதியின் மூலம், பேராக்கிலிருந்து அதிகபட்சம் 700 டன் அரிய மண் கார்பனேட்டை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். முதல் கட்டமாக, சுமார் 30 டன் கனிமங்கள் இந்த வார இறுதியில் அனுப்பப்படும் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மிலன் பெர்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், மலேசியாவின் அரிய மண் கனிமங்களைப் பிரித்தெடுத்து சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்களைச் சோதிப்பதற்காக இந்தக் கனிமங்களைப் பயன்படுத்தவுள்ளன.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள DTEC நிறுவனத்தில் 51 விழுக்காடு பங்குகள் அமெரிக்கக் குடிமக்களுக்குச் சொந்தமானவை.
உள்நாட்டு கனிம வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், மலேசியா 2024ஆம் ஆண்டு மூல அரிய மண் கனிமங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. இருப்பினும், கடந்த அக்டோபரில் ஆராய்ச்சி மற்றும் பதப்படுத்தும் தேவைகளுக்காக நிபந்தனைகளுடன் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
உள்நாட்டில் கனிமச் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதுடன், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்பும் மேற்கத்திய நாடுகளின் தேவையைப் பயன்படுத்திக்கொள்வதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
மலேசியாவில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கத் திட்டம்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மலேசியாவில் அரிய மண் கனிமங்களைச் சுத்திகரிக்கும் ஆலையை அமைக்க DTEC திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அமெரிக்காவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM Bank) அதிகபட்சம் 650 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதியுதவி வழங்குவதற்கான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக மிலன் பெர்லி கூறினார்.
மலேசியாவில் சுமார் 16.1 மில்லியன் டன் அரிய மண் கனிம வளங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. எனினும், அவற்றைச் சுரங்கம் தோண்டி எடுப்பதற்கும் சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் இன்னும் போதுமான அளவில் இல்லை.
அரிய மண் கனிமச் சுத்திகரிப்புத் துறையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்கா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இதனால், மலேசியாவில் அரிய மண் கனிமத் துறையில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளால் முன்னர் இந்தத் துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் மலேசியா தயக்கம் காட்டியிருந்தது. தற்போது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு கனிமத் தொழில்துறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
