கோலாலம்பூர், அக். 30 : Zetrix AI Bhd நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமான My EG Sdn Bhd-க்கு, உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) RM353.13 மில்லியன் கூடுதல் வரி மதிப்பீட்டை விதித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (அக். 28) வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், 2021, 2022 மற்றும் 2023ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான பரிமாற்ற விலை நிர்ணயம் (Transfer Pricing) தொடர்பாக RM333.10 மில்லியனும், கணக்கிடப்பட்ட வட்டி தொடர்பாக RM20.02 மில்லியனும் அடங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அபராதங்களும் உள்ளடங்குகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக MyEG நிறுவனத்துக்கு எதிராக மலேசிய அரசு சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் Zetrix AI, மலேசியப் பங்குச் சந்தைக்கு (Bursa Malaysia) அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமது தரப்பு நிலைப்பாட்டுக்கு வலுவான அடிப்படை இருப்பதாக நம்பும் MyEG, தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் உரிய சட்ட வழிமுறைகள் மூலம் தனது நிலைப்பாட்டை ஆதரித்துப் போராடும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், விதிக்கப்பட்ட கூடுதல் வரி மதிப்பீடுகளை எதிர்த்து, வருமான வரி சிறப்பு ஆணையர்களிடம் (Special Commissioners of Income Tax) MyEG மேல்முறையீடு செய்துள்ளது. அதேவேளை, உள்நாட்டு வருவாய் வாரியத்துடன் சுமுகமாகத் தீர்வு காணவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டால், அதுகுறித்து மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் என Zetrix AI தெரிவித்துள்ளது.
RM314 மில்லியன் நிலுவை தொடர்பான செய்திக்கும் விளக்கம்
இதற்கிடையில், RM314 மில்லியன் நிலுவைத் தொகை தொடர்பாக Zetrix AI நிறுவனத்துக்கு எதிராக அரசு வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி குறித்தும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அந்த விவகாரம் தொடர்பாக அரசிடமிருந்து இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வக் கடிதமும் கிடைக்கவில்லை என Zetrix AI தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும்போது, உரிய நேரத்தில் தேவையான அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
