அனுமதியின்றி தீபாவளி சந்தைகளில் வெளிநாட்டினர் வியாபாரம் செய்யத் தடை – ஏற்பாட்டாளர்களுக்கும் நடவடிக்கை

கோலாலம்பூர், நவம்பர் 2 : உள்ளூர் சந்தைகள் மற்றும் திருவிழாக்களில் வெளிநாட்டினர் உரிய அனுமதியின்றி வியாபாரம் செய்யக் கூடாது என்றும், விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யத் தவறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

வெளிநாட்டினர் வியாபாரத்தில் ஈடுபடுவது தொடர்பான சட்ட மீறல்களை உள்துறை அமைச்சு (KDN) ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என அவர் எச்சரித்தார். இதற்காக ஏற்பாட்டாளர்கள் தங்களது நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து வியாபாரிகளும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளிநாட்டினர் வியாபாரம் செய்வதற்கு குடிநுழைவு விதிமுறை 39B-இன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

புக்கிட் ஜாலில் நடைபெற்ற 24ஆவது தீபாவளி கர்னிவலுக்கு திங்கள்கிழமை வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சந்தைகள் மற்றும் கர்னிவல்களில் வியாபார உரிமம் வழங்குவது உள்ளாட்சி மன்றங்களின் (PBT) அதிகாரத்திற்கு உட்பட்டது. எனினும், அனுமதியின்றி வியாபாரம் செய்வோருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் போலீஸ், மலேசிய குடிநுழைவுத் துறை மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் இணைந்து மேற்கொள்வதாக அவர் விளக்கினார்.

இதற்கிடையில், அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி கர்னிவலை ஏற்பாடு செய்துள்ள அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை அவர் பாராட்டினார். இந்நிகழ்வு தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பிப்பதுடன், உள்ளூர் வியாபாரிகளுக்கும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.

இக்கர்னிவலில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கர்னிவலின் ஏற்பாட்டாளரும் அஜெண்டா சூரியா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியுமான ஜக்கராவ் சிமான்சா கூறுகையில், பங்கேற்கும் அனைவரும் மலேசிய வியாபாரிகள் என்றும், அவர்களுக்கு மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வணிகக் கூட்டாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டாண்மை மூலம் உள்ளூர் வியாபாரிகள் வெளிநாட்டுச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவதுடன், உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத் துறையின் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு சுமார் 400,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்றும், RM50 மில்லியன் முதல் RM70 மில்லியன் வரை விற்பனை நடைபெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு சுமார் 50 கண்காட்சி அரங்குகளுடன் தொடங்கப்பட்ட இக்கர்னிவல், இவ்வாண்டு 400 அரங்குகளாக வளர்ச்சியடைந்துள்ளது. போக்குவரத்து வசதி, பரந்த வாகன நிறுத்துமிடம் மற்றும் அமைவிடத்தின் காரணமாக புக்கிட் ஜாலில் தேர்வு செய்யப்பட்டதாக ஜக்கராவ் தெரிவித்தார்.

பகிருங்கள்: