கோலாலம்பூர், நவம்பர் 2: மலேசியாவின் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, அதிக லாபம் ஈட்டியும் உள்ளூர் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தையே வழங்கும் சில உற்பத்தி நிறுவனங்கள் தடையாக இருப்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
சில உற்பத்தி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டினாலும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாதம் RM2,000 சம்பளம் வழங்கக்கூடத் தயங்குவதாக அவர் கூறினார். மாறாக, தொடக்கச் சம்பளமாக RM1,700 என்ற குறைந்தபட்ச ஊதியத்தையே தொடர்ந்து வழங்க விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) முடித்த பட்டதாரிகளும் இதே பிரச்சினையை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார். தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டிருந்தாலும், சில நிறுவனங்கள் அவர்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான சம்பளத்தையே வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை (நவம்பர் 2) மக்களவையில் உரையாற்றிய அவர்,
“சில நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டுகின்றன. ஆனால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு RM2,000 சம்பளம் வழங்க வேண்டும் என்றால் மறுக்கின்றன. தொடர்ந்து RM1,700 தொடக்கச் சம்பளத்தையே வழங்க விரும்புகின்றன.
“TVET பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளத்தை வழங்கவே விரும்புகின்றன,” என்றார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதிகளும் உள்ளூர் தொழிலாளர்களுக்கான வசதிகளும் வேறுபடுவது இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதாக ஜொஹாரி தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பலருக்கு நிறுவனங்களே தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. ஆனால், உள்ளூர் தொழிலாளர்கள் தங்களுக்கான வீட்டு வாடகையைத் தாங்களே ஏற்க வேண்டிய நிலை இருப்பதாக அவர் விளக்கினார்.
மலேசியா நீண்டகாலமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது தற்போது முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், நாட்டில் தற்போது சுமார் 26 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாலும், மலேசியாவில் 10 அல்லது 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்கள்கூட தொடர்ந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களையே நாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
“நமது கொள்கைகள் அளவுக்கு அதிகமான நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதே இந்தப் பிரச்சினைகளில் பலவற்றுக்குக் காரணமாகும்,” என்றார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆபத்தான, கடினமான மற்றும் அசுத்தமான பணிகள் (3D – Dangerous, Difficult and Dirty) போன்ற வேலைகளில் முதன்மையாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும், உற்பத்தித் துறையின் அனைத்துப் பணிகளுக்கும் அவர்களையே விரும்பும் நிலை உருவாகக்கூடாது என்றும் ஜொஹாரி வலியுறுத்தினார்.
மேலும், TVET திட்டங்களின் மூலம் பயிற்சி பெற்றுள்ள 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்நாட்டுத் தொழில்துறையில் வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், சில வேலைகளை ஏற்க மலேசியர்கள் விரும்புவதில்லை என்பதற்குச் சோம்பேறித்தனமே காரணம் என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
இதற்கு உதாரணமாக, நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் மலேசியர்கள் வேலைக்காக சிங்கப்பூர் செல்வதை அவர் சுட்டிக்காட்டினார். அவர்களில் பட்டயக் கல்வி, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் அடங்குவர்.
“நமது தொழிற்சாலைகளில் செய்யப்படும் வேலைகளுக்கு ஏறக்குறைய ஒத்த பணிகளைச் சிங்கப்பூரில் ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? அதற்குப் பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் பலன்தான் காரணம்,” என்றார்.
உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் செலவுகளிலிருந்து மாறுபடுவதால், போதுமான பொருளாதாரப் பலனை வழங்காத வேலைகளை மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் விளக்கினார்.
சிறந்த வருமான வாய்ப்புகளைத் தேடி மின்னணு அழைப்புப் போக்குவரத்து (e-hailing) ஓட்டுநர்களாகப் பணியாற்றும் மலேசியர்களையும் அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
“ஒரு வேலை அவர்களுக்குப் போதுமான பொருளாதாரப் பலனை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த வேலையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என்றார்.
உற்பத்தித் துறையில் சம்பளத்தை உயர்த்த இலக்கு
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில்துறை பெருந்திட்டம் 2030 (NIMP 2030), உற்பத்தித் துறையில் சராசரி மாதச் சம்பளத்தின் நடுநிலையை 2030ஆம் ஆண்டுக்குள் RM4,510 ஆக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக ஜொஹாரி தெரிவித்தார்.
சம்பள உயர்வு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், அதிக லாபம் ஈட்டும் சில உற்பத்தி நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் RM2,000 சம்பளம்கூட வழங்க ஏன் தயங்குகின்றன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான உரிம விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் அரசாங்கம் தற்போது கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, ஏற்கெனவே இயங்கும் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் அதே நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள விரும்பும் புதிய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றார்.
“வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகமாகச் சார்ந்திருக்கும் இதுபோன்ற மேலும் பல நிறுவனங்கள் செயல்பட அனுமதித்தால், நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்,” என்று அவர் எச்சரித்தார்.
தமது அமைச்சையோ அல்லது மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தையோ (MIDA) அணுகும் நிறுவனங்களிடம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 3D பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இதர பணிகளுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
பாக்ரி தொகுதி பக்காத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ஜொஹாரி இவ்வாறு கூறினார்.
குறைந்த செலவில் தொழிலாளர்களைப் பெறுவதற்காக இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மாற்ற ஊக்குவிக்கப்படுவது குறித்துக் கவலை தெரிவித்திருந்தார்.
சில உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கெனவே உயர்நிலை தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், குறிப்பிட்ட பணிகளுக்கு இன்னமும் மனித உழைப்பு தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஒவ்வொரு தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டுத் தொழிலாளர் கொள்கைகளில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அமைச்சு பரிசீலிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எளிதான காரியமல்ல என்பதை ஒப்புக்கொண்ட ஜொஹாரி, இருப்பினும் தற்போதைய கொள்கைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்காலத்தில் நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
மேலும், நாட்டில் சட்டப்பூர்வமாகப் பணியாற்றும் 26 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில், ஆவணங்கள் இன்றி பணியாற்றும் கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தக் கொள்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் அது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்தார்.
