தென்கொரியாவிடமிருந்து முதல் FA-50M போர் விமானத்தைப் பெற்றது மலேசியா!

லாபுவான்: மலேசிய விமானப்படைக்காக வாங்கப்பட்ட முதல் FA-50M இலகுரக போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின் இன்று பெற்றுக்கொண்டார். நாட்டின் வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

தென்கொரியாவின் Korea Aerospace Industries நிறுவனம் தயாரித்த இந்த விமானம், அந்நாட்டின் சச்சியோன் (Sacheon) நகரிலிருந்து மலேசிய விமானப்படையின் லாபுவான் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த விமானத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் குவாந்தான் விமானப்படைத் தளத்தில் நடைபெறும் என்று லாபுவான் விமானப்படைத் தளத்தில் செய்தியாளர்களிடம் காலித் தெரிவித்தார்.

மலேசியாவின் ராணுவத் திறனை மேம்படுத்தவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் இந்தக் கொள்முதல் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், விமானப்படையின் நீண்டகாலத் திறன் மேம்பாட்டுத் திட்டமான 2055ஆம் ஆண்டுக்கான திட்டத்திற்கும் (Capability Development Plan 2055) இந்த விமானக் கொள்முதல் ஆதரவாக இருக்கும் என்றார்.

எதிர்காலத்தில் மலேசியாவின் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, நவீன மற்றும் மேம்பட்ட போர் விமானங்களின் இரண்டாவது தொகுதியை வாங்குவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார். இருப்பினும், அடுத்தகட்ட விமானங்கள் எந்த நாட்டிலிருந்து வாங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

18 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

மலேசிய விமானப்படையின் பழைய ஹாக் (Hawk) ரக விமானங்கள் 2028ஆம் ஆண்டில் படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட உள்ளன. இதற்குப் பதிலாக, விமானப்படையின் பயிற்சி மற்றும் இலகுரக போர் விமானத் திட்டத்தின் கீழ் மொத்தம் 18 FA-50M விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதில் ஆறு விமானங்கள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், எஞ்சிய விமானங்கள் 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் என்றும் காலித் தெரிவித்தார்.

ஹாக் விமானங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, எத்தனை FA-50M விமானங்கள் லாபுவான் தளத்தில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

ஒலியை விட வேகமாகப் பறக்கும் திறன்

FA-50M என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட போர் விமானமாகும். விமானிகளுக்கான பயிற்சிக்கும், முக்கியமான ராணுவ நடவடிக்கைகளுக்கும் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்த விமானம் ஒலியின் வேகத்தை விட அதிகமாக, அதிகபட்சம் மாக் 1.2 (Mach 1.2) வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், அதிக உயரத்திலும் செயல்படக்கூடியது.

இந்தப் புதிய விமானப் படைப்பிரிவை வழிநடத்துவதற்காக ஆறு விமானிகள், ஆறு பொறியியல் அதிகாரிகள் மற்றும் 45 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 57 பேர் தென்கொரியாவில் பயிற்சியை முடித்துள்ளனர்.

ஆரம்பகட்டப் பயிற்சிக் குழுவில் இடம்பெற்ற ஆறு விமானிகளும் அக்டோபர் 21ஆம் தேதி தங்களது விமானப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

FA-50M விமானங்கள் 15ஆவது படைப்பிரிவின் (No. 15 Squadron) கீழ் இயக்கப்படும். இந்தப் படைப்பிரிவில் ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அதன் செயல்பாட்டுத் தளமாக குவாந்தான் தயாராகி வருகிறது.

பகிருங்கள்: