கூச்சிங், நவம்பர் 2 : ஜாலான் லப்பாங்கான் தேர்பாங்கில் சேதமடைந்த 750 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட முக்கிய குடிநீர் குழாயின் அவசரப் பழுதுபார்க்கும் பணிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நிறைவடைந்ததாக சரவாக் வாட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கூச்சிங் நகர்ப்புற போக்குவரத்து அமைப்புத் திட்டத்தின் (KUTS) கட்டுமானப் பணிகளின்போது மூன்றாம் தரப்பினரின் நடவடிக்கையால், ஜாலான் கூச்சிங் ரேஞ்சர் டிப்போ அருகே அமைந்திருந்த 750 மில்லிமீட்டர் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் முன்னறிவிப்பின்றி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்தத் தடையால் டத்தோக் மூடா நீர்த்தேக்க விநியோகப் பகுதி, ஜாலான் லப்பாங்கான் தேர்பாங், ஜாலான் துன் ஜுகா, ஜாலான் பத்து லிந்தாங் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அக். 29ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் அக். 30ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட தகவலின்படி, குழாயில் நீர் கசிவு ஏற்பட்ட இடம் கண்டறியப்பட்டு, பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக அந்தப் பகுதியில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீர் விநியோக வால்வுகள் மீண்டும் திறக்கப்பட்டு, குழாய்களில் நீர் அழுத்தத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.
உயரமான பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் நீர் விநியோகக் குழாய்களின் இறுதிப் பகுதிகளில் உள்ளவர்கள் வழக்கமான நீர் அழுத்தம் கிடைக்கச் சற்று அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது தண்ணீர் தற்காலிகமாக கலங்கலாகவோ, பழுப்பு நிறமாகவோ அல்லது பால் போன்ற வெண்மை நிறத்திலோ காணப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
குழாய்களில் படிந்துள்ள மண் மற்றும் வண்டல் துகள்கள் கலப்பதால் தண்ணீரின் நிறம் மாறக்கூடும். அதேபோல், குழாய்களில் சிக்கியுள்ள காற்றுக் குமிழ்கள் காரணமாகத் தண்ணீர் பால் போன்ற தோற்றத்தில் காணப்படலாம்.
எனவே, குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு வெளிப்புறக் குழாயைச் சில நிமிடங்கள் திறந்து வைத்து, தண்ணீர் முற்றிலும் தெளிவாக வரும் வரை காத்திருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சமைக்க, குடிக்க மற்றும் கழுவுவதற்குப் பயன்படுத்தும் முன்பு இந்த முன்னெச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், அவசரப் பழுதுபார்க்கும் பணிகளின்போது ஒத்துழைப்பு வழங்கிய குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சரவாக் வாட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
குடிநீர் விநியோகம் முழுமையாகச் சீரடையும் வரை நீர் விநியோகக் கட்டமைப்பைத் தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
