கோலாலம்பூர், நவம்பர் 2 : தடுப்புக் காவலில் உயிரிழந்த நோரிஸ்வான் ஸுல்கெஃப்லி தொடர்பான விவகாரத்தில், தடயவியல் நிபுணர் ஒருவரைச் சில வழக்கறிஞர்கள் மிரட்டித் துன்புறுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் டத்தோ எம். குமார் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இவ்விவகாரம் குற்றவியல் சட்டத்தின் 506, 186 மற்றும் 189ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
புக்கிட் அமான் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,
“பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவர் அரசு ஊழியராவார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன,” என்றார்.
இதுவரை சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று வழக்கறிஞர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நோரிஸ்வானின் குடும்ப உறுப்பினர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நோரிஸ்வானின் மரணம் தொடர்பான விசாரணை
இதற்கிடையில், நோரிஸ்வானின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைக்காக புதன்கிழமை சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திடம் (AGC) சமர்ப்பிக்கப்படும் என்று குமார் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக, நோரிஸ்வானின் மரணம் தொடர்பான விசாரணை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் வழக்குத் தொடர்வு மற்றும் சட்டப் பிரிவான D5 வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 331ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஹாஸ்பிட்டல் சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ ஆலோசகரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணைப் பிரிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் வெளிப்புறக் காயங்கள் காணப்பட்டதாகவும், அவை தன்னைத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களாக இல்லாமல், மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப்போவதாகவும் அந்த மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மரணத்திற்கான உறுதியான காரணத்தை உறுதிப்படுத்தும் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை போலீசாருக்குக் கிடைக்கவில்லை.
அந்த அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைத்த பின்னர் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
