கோத்தா கினபாலு, நவம்பர் 2: சபாவின் புகழ்பெற்ற கினாபாலு மலையில் அமைக்கப்படவுள்ள உயரமான பகுதியில் பயிற்சி மையத்தின் (High Altitude Training Centre – HATC) கட்டுமானப் பணிகளை மாநில அரசு உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று சபா சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஜஃப்ரி அரிஃபின் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், எடை குறைந்த, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட மற்றும் தொகுதிகளாகப் பொருத்தக்கூடிய கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
மேலும், மலையின் உயரமான பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் கடுமையான வானிலை நிலைகளைத் தாங்கும் வகையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளின்போது கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது என்றும் அவர் விளக்கினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு கினாபாலு தேசியப் பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி மையம் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. ஆனால், அதே ஆண்டு கினாபாலு மலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், சபாவின் சுற்றுலாத் துறையைப் பல்வேறு வகைகளில் மேம்படுத்தவும், சர்வதேச அளவில் மலையேற்றச் சுற்றுலாத் தலமாக அதன் பெயரை வலுப்படுத்தவும் கடந்த ஆண்டு இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
எவரெஸ்ட், கிளிமஞ்சாரோ ஏறுவதற்கான பயிற்சி
இந்தப் பயிற்சி மையம், கிளிமஞ்சாரோ மற்றும் எவரெஸ்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற மலைகளில் ஏறுவதற்குத் தயாராகும் மலையேற்ற வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி இடமாகச் செயல்படும் என்று ஜஃப்ரி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மலையின் கலாசார முக்கியத்துவத்துக்கும் முன்னுரிமை அளித்தபடி, மலையேற்ற வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
இந்தத் திட்டத்துக்கு சபா பூங்காக்கள் அறங்காவலர் வாரியத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும், கினாபாலு மலையின் கலாசார மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், கினாபாலு மலை பூர்வகுடியினர் பாரம்பரிய ஆலோசனைக் குழுவின் ஆதரவும் பெறப்பட்டுள்ளது.
கினாபாலு மலை சபாவின் இயற்கை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. குறிப்பாக, அங்குள்ள பூர்வகுடி மக்களின் மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் அடையாளத்துடன் இந்த மலை ஆழமாக இணைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை
“இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் உள்ளூர் மக்களின் கலாசார மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். பொருளாதார வாய்ப்புகளும் சுற்றுலா வளர்ச்சியும் நமது கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
கட்டுமான முறைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் கட்டடங்கள் பாதுகாப்பானதாகவும் உயரமான மலைப்பகுதிகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பு எங்களின் அடிப்படை முன்னுரிமையாகும். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கினாபாலு மலையின் இயற்கைச் சூழல் மற்றும் உயிரியல் வளங்களை ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்,” என்றும் ஜஃப்ரி உறுதியளித்தார்.
