விவாதத்துக்கு லோக் சியூ ஃபூக் விடுத்த சவால் வியப்பளிக்கிறது – வீ கா சியோங்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2: ஜனநாயகச் செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் விவாதத்துக்கு விடுத்துள்ள சவால் தனக்கு வியப்பளிப்பதாக மலேசிய சீன சங்கத்தின் (MCA) தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் MCA மற்றும் DAP வேட்பாளர்கள் தங்களுக்கு இடையே விவாதம் நடத்த வேண்டும் என்று வீ கா சியோங் முன்மொழிந்ததைத் தொடர்ந்து, லோக் இந்தச் சவாலை விடுத்ததாக நம்பப்படுகிறது.

“இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மலாக்கா MCA தகவல் பிரிவுத் தலைவரான ஜாஸ்மின் லோக், பண்டார் ஹிலிர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் DAP வேட்பாளர் லெங் சாவ் யெனுடன் விவாதம் நடத்தலாமா என்று தம்மிடம் கேட்டதாக வீ கா சியோங் தெரிவித்தார்.

“வாகன நிறுத்துமிடக் கட்டண முறை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது எதிரணி வேட்பாளருடன் விவாதம் நடத்தலாமா என்று ஜாஸ்மின் லோக் என்னிடம் கேட்டார். அதற்கு நான் தாராளமாக நடத்தலாம் என்று கூறினேன்,” என அவர் FMT செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

வாக்காளர்கள் இரு வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் தெளிவாக அறிந்துகொள்வதற்கு விவாதமே சிறந்த தளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மலாக்காவை மையமாகக் கொண்ட ஒரு விவகாரத்தில் லோக் தமக்கு விவாதச் சவால் விடுத்திருப்பது விசித்திரமாக இருப்பதாக வீ கா சியோங் கூறினார்.

மேலும், லெங் சாவ் யெனின் பேச்சுத் திறன் குறைபாட்டைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும், தாம் அவரை அச்சுறுத்துவதாகவும் லோக் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

“இரண்டு வேட்பாளர்களும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்பது எப்படி அச்சுறுத்தலாகும்?

“லோக் அந்தப் பிரச்சினையைக் குறிப்பிடும் வரை லெங்கிற்கு பேச்சுத் திறன் குறைபாடு இருப்பதே எனக்குத் தெரியாது,” என்றார் அவர்.

இதற்கிடையில், இன்று முன்னதாகப் போக்குவரத்து அமைச்சரான லோக் சியூ ஃபூக், தமக்கு முன்பு அந்த அமைச்சுப் பொறுப்பை வகித்த வீ கா சியோங்குடன் அமைச்சராக இருந்த காலத்தில் தங்களது சாதனைகள் குறித்து விவாதிக்கத் தயார் என்று சவால் விடுத்திருந்தார்.

வீ கா சியோங் விவாதிக்க விரும்பினால், போக்குவரத்துத் துறை தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் தம்முடன் விவாதிக்கலாம் என்றும் லோக் தெரிவித்திருந்தார்.

ஆனால், போக்குவரத்து அமைச்சராகத் தமது செயல்பாடுகள் குறித்து லோக்கிடம் தாம் ஒருபோதும் விவாதத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று வீ கா சியோங் விளக்கமளித்தார்.

“எல்லா வகையிலும் அவர் தன்னை மலேசிய வரலாற்றிலேயே மிகச் சிறந்த போக்குவரத்து அமைச்சர் என்று அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியடையட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை,” என்றார்.

மேலும், இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறான சூழ்நிலைகளில் அமைச்சுப் பொறுப்பை வகித்ததால், அவர்களின் சாதனைகளை ஒப்பிடுவது நியாயமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

லோக் சியூ ஃபூக் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான மத்திய அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியை இழந்தார்.

அதன்பின்னர் வீ கா சியோங் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்று 2022ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு டிசம்பர் மாதம் லோக் மீண்டும் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

“நான் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, உலகம் முழுவதும் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. விமானப் போக்குவரத்தும் முடங்கியிருந்தது.

“இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் எங்களுடைய சாதனைகளை ஒப்பிடுவது நியாயமற்றதாகும்,” என்று வீ கா சியோங் தெரிவித்தார்.

பகிருங்கள்: