ஜோகூர் பாருவில் சரக்கு ரயிலில் தீ விபத்து – என்ஜின் 5 விழுக்காடு சேதம்; உயிரிழப்பு இல்லை

ஜோகூர் பாரு, நவம்பர் 3: ஜோகூர் பாருவில் தாமான் டாயா அருகே கிலோமீட்டர் 4.75 பகுதியில் நேற்று பயணித்த KTMB சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ரயிலின் என்ஜின் பகுதி சேதமடைந்தது. எனினும், யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.

கெம்பாஸ் பாரு ரயில் நிலையத்திலிருந்து பாசிர் கூடாங் ரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெப்ராவ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவர் நோர் அஸ்மி மரியானோ தெரிவித்தார்.

நவம்பர் 2ஆம் தேதி பிற்பகல் 1.26 மணிக்கு தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து, ஏழு தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த இடம் தீயணைப்பு நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

“சம்பவ இடத்தை அடைந்தபோது, சரக்கு ரயிலின் என்ஜினில் தீப்பற்றியிருந்தது தெரியவந்தது. இதில் சுமார் 5 விழுக்காடு சேதம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் நோர் அஸ்மி கூறினார்.

பகிருங்கள்: