பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 4 : 2027ஆம் ஆண்டுக்கான QS ஆசியப் பல்கலைக்கழக தரவரிசையில் மலேசியாவைச் சேர்ந்த 11 பல்கலைக்கழகங்கள் ஆசியாவின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தரவரிசையில் மொத்தம் 55 மலேசியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், ஆசியாவில் அதிக பல்கலைக்கழகங்களைக் கொண்ட எட்டாவது உயர்கல்வி முறையாக மலேசியா இடம்பிடித்துள்ளது.
பிராந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டி அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவின் 20 பல்கலைக்கழகங்கள் தங்களது தரவரிசையை உயர்த்தியுள்ளன. நான்கு பல்கலைக்கழகங்கள் முந்தைய இடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், 25 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் சரிவைக் கண்டுள்ளன.
மலேசியாவின் பழமையான பல்கலைக்கழகமான மலாயா பல்கலைக்கழகம் (UM), இரண்டு இடங்கள் சரிந்து 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஆசியாவின் முதல் 20 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெற்றுள்ளதுடன், மலேசியாவின் முதலிடப் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் தக்கவைத்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, தேசியப் பல்கலைக்கழகமான Universiti Kebangsaan Malaysia (UKM) முதன்முறையாக ஆசியாவின் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.
மற்ற மலேசியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை வருமாறு:
- Universiti Putra Malaysia – 24ஆவது இடம்.
- Universiti Teknologi Malaysia – 25ஆவது இடம்.
- Universiti Sains Malaysia – 27ஆவது இடம்.
- Taylor’s University – 32ஆவது இடம்.
- UCSI University – 36ஆவது இடம்.
- Sunway University – 47ஆவது இடம்.
தனியார் பல்கலைக்கழகங்களில் Taylor’s University மலேசியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Sunway University கடந்த ஆண்டைவிட எட்டு இடங்கள் முன்னேறி 47ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக ஆசியாவின் முதல் 50 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், INTI International University முதன்முறையாக ஆசியாவின் முதல் 100 பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்துள்ளது.
மேலும், Universiti Malaysia Terengganu (UMT) முதல் 150 இடங்களுக்குள்ளும், Universiti Malaysia Sabah (UMS) முதல் 200 இடங்களுக்குள்ளும் இடம்பெற்றுள்ளன.
SEGi University மற்றும் IMU University ஆகியவை முதல் 300 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. Tunku Abdul Rahman University of Management and Technology முதல் 600 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
QS நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பென் சௌட்டர் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளில் QS ஆசியப் பல்கலைக்கழக தரவரிசையின் முதல் 100 இடங்களில் இடம்பெறும் மலேசியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், 2035ஆம் ஆண்டு வரையிலான உயர்கல்வி வளர்ச்சிக்கான விரிவான திட்டத்தை மலேசியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், நாட்டின் உயர்கல்வித் துறை மேலும் வளர்ச்சியடைந்து சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துகள் நவம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான QS ஆசியப் பல்கலைக்கழக தரவரிசையில், 26 உயர்கல்வி முறைகளைச் சேர்ந்த 1,720க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டு புதிதாக 195 பல்கலைக்கழகங்கள் இந்தத் தரவரிசையில் இணைந்துள்ளன.
பிராந்திய அளவில், ஹொங்கொங் பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தில் மாற்றமின்றித் தொடர்கிறது.
இதற்கிடையில், சிங்குவா பல்கலைக்கழகம் ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
