2050ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் ரயில்வே துறையில் 9.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு எதிர்பார்ப்பு

ஆசியா-பசிபிக், நவம்பர் 4 : 2050ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மொத்தம் 9.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் (PwC) வெளியிட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் இத்துறைக்கான வருடாந்திர முதலீடு 228.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2050ஆம் ஆண்டுக்குள் 469.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2.8 விழுக்காடாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தோனேசியா ஜகார்த்தா-பாண்டுங் அதிவேக ரயில் சேவையை விரிவுபடுத்தி வரும் நிலையில், தாய்லாந்து பாங்காக்-நோங் கை அதிவேக ரயில் திட்டத்தில் முன்னேறி வருகிறது.

மலேசியாவும் நகர்ப்புற ரயில் போக்குவரத்துத் திட்டங்களை மேம்படுத்துவதுடன், கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் இணைப்புத் திட்டத்தையும் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பிராந்திய இணைப்பை வலுப்படுத்தவும் ரயில்வே முதலீடுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பகிருங்கள்: