மதுபான நிறுவனத்தின் அனுசரணை நீக்கப்படாவிட்டால் HYROX 2026 போட்டிக்கு அனுமதி இல்லை – மலேசிய இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு அதிரடி!

கோலாலம்பூர், நவம்பர் 5 : சர்வதேச உடற்பயிற்சிப் போட்டியான HYROX Kuala Lumpur 2026 நிகழ்வுக்கு மதுபான நிறுவனம் வழங்கும் அனுசரணை முழுமையாக நீக்கப்படாவிட்டால், அப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்படாது என மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு (KBS) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சர்வதேச உடற்பயிற்சிப் போட்டியின் உத்தியோகபூர்வ பீர் அனுசரணையாளராக மதுபான நிறுவனம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அறிவிப்பின் திரைப்பிடிப்புகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. இதையடுத்து, அமைச்சு இந்தத் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள HYROX Kuala Lumpur 2026 போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், இதுவரை அமைச்சின் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

Berita Harian வெளியிட்டுள்ள செய்தியின்படி, போட்டிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பாக மதுபான நிறுவனத்தின் அனைத்து அனுசரணைகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அத்துடன், அந்நிறுவனத்தின் சின்னங்கள், வர்த்தகக் குறியீடுகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் அனைத்தும் போட்டியின் உத்தியோகபூர்வ இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலிருந்தும் அகற்றப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:

“போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் தற்போது பரிசீலனையில் உள்ளது. இதுவரை அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், இந்நிகழ்வுக்காக KBS அமைச்சு எந்தவிதமான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கவில்லை.

“2024ஆம் ஆண்டின் மூன்றாவது பதிப்பான பாதுகாப்பான விளையாட்டுக் குறியீட்டின் (Safe Sports Code) பிரிவு 5.2இன்படி, புகையிலை, மின்னணுச் சிகரெட் அல்லது மதுபான வணிகத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், KBS அல்லது அதன் முகவரமைப்புகளின் அனுமதி அல்லது ஆதரவுடன் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, அனுசரணை வழங்குவது, விளம்பரப்படுத்துவது அல்லது தங்களது வர்த்தகச் சின்னங்களைக் காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது, பாதுகாப்பான விளையாட்டுக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் ஒரே விதிமுறை

இந்த விதிமுறைகள் எந்தவித விதிவிலக்குமின்றி அனைத்து விளையாட்டு நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் பொருந்தும் என அமைச்சர் முகமட் தௌஃபிக் வலியுறுத்தினார்.

குறிப்பாக, புகையிலை, மின்னணுச் சிகரெட் மற்றும் மதுபானத் தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரபலமான வர்த்தகப் பெயர்கள் அல்லது அவை இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும், விதிமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 1997ஆம் ஆண்டு விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின் (Sports Development Act 1997 – Act 576) பிரிவு 36(1)இன்படி, மலேசிய விளையாட்டு ஆணையரிடமிருந்து உரிய உரிமம் பெறாத நிறுவனங்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 50,000 ரிங்கிட் முதல் 500,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

“அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான விளையாட்டுச் சூழலை உறுதிப்படுத்தும் விடயத்தில் KBS எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது,” என அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பகிருங்கள்: