வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு 8 மாதங்களில் 1.33 லட்சம் சம்மன்கள்! உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 21,232 பேர் சிக்கினர்

கோலாலம்பூர், நவம்பர் 6 : இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு மொத்தம் 1,33,081 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

இதில், முறையான வாகன ஓட்டுநர் உரிமம் (CDL) இன்றி வாகனம் ஓட்டியதாக 21,232 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதே காலப்பகுதியில், சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் (GDL) இன்றி வாகனம் ஓட்டியதாக 1,933 வழக்குகளும், பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான உரிமம் (PSV) இன்றி வாகனம் ஓட்டியதாக 85 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (LKM), காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமை, நுழைவு அனுமதி அல்லது சர்வதேச போக்குவரத்து அனுமதி (ICP) இல்லாமை, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சுமை ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களும் இதில் அடங்கும் என அவர் கூறினார்.

மீண்டும் மீண்டும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில், தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஓட்டுநர்கள் தொடர்பாகப் பதிவான மொத்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் இத்தகைய குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டாக்டர் சித்தி மஸ்துரா முஹம்மது (PN-Kepala Batas) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மேலும், விதிமுறைகளை மீறிய வாகனங்கள் மீது குடிநுழைவுத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார். குறிப்பாக, குடிநுழைவு தொடர்பான விதிமீறல்கள் மற்றும் இதர குற்றங்களில் இந்தக் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாகன உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்களது வாகனங்களைச் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்டவர்கள் மட்டுமே இயக்குவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அமைச்சு வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, அதிக ஆபத்துள்ள இடங்கள் மற்றும் துறைகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளைச் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) தொடர்ந்து தீவிரப்படுத்தும்.

வெளிநாட்டவர்கள் உட்பட ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகள் அனைவரும் சட்ட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

பகிருங்கள்: