சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மோசடி செய்யும் நடவடிக்கையில், முக்கிய ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் 27 வயதான மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
“Da Xiang” என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் அந்த நபர், மலேசியர்களை ஆட்சேர்ப்பு செய்து, சிங்கப்பூரில் மோசடி மற்றும் பணச் சலவை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அவர் குறைந்தது நான்கு மலேசியர்களைச் சந்தித்து, அவர்களுக்குப் பணிகளை வழங்கியதுடன், ATM மூலம் பணம் பெறும் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசடி செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கப் பொருட்களை ஜொகூர் பாருவுக்குக் கொண்டு வந்து அவரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குறைந்தது S$500,000 மதிப்பிலான மோசடி மற்றும் சட்டவிரோத வருமானத்தைச் சலவை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மலேசிய காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் அவர் செப்டம்பர் 22ஆம் தேதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
