செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உலகளாவிய வணிக வாய்ப்புகள்! சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் கோபிந்த் அழைப்பு

புக்கிட் ஜலீல், நவம்பர் 2: செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (SME) சர்வதேசச் சந்தைகளில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த முடியும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சி, உள்ளூர் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கும், வெளிநாட்டுப் பொருட்களை மலேசியச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் தொழில்முனைவோர் மலேசியாவைத் தாண்டி, ஆசியான் பிராந்தியம் மற்றும் உலகளாவிய சந்தைகளில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த உதவுவதாக கோபிந்த் கூறினார்.

வணிகம் என்பது இனி உள்ளூர் அல்லது பாரம்பரியச் சந்தைகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் தொழில்முனைவோர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 2026 தீபாவளிக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மலேசியாவுக்கான இந்தியத் தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷும் கலந்து கொண்டார்.

இந்திய அரசின் ஆதரவுக்கு வரவேற்பு

மலேசியாவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இந்தியத் தொழில்முனைவோர் பங்கேற்பதற்கு இந்திய அரசு ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதை கோபிந்த் வரவேற்றார்.

இத்தகைய முயற்சிகள் வெளிநாட்டு வர்த்தகர்களின் பங்கேற்பை அதிகரிப்பதுடன், மலேசியத் தொழில்முனைவோர் புதிய வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஆராயவும் உதவும் என்றார்.

மேலும், தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவும் ஊக்கத்தொகைகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தர இலக்கு

இந்தியாவுக்குச் செல்லாமலேயே இந்தியச் சமூகத்தின் கலாசாரம் சார்ந்த பொருட்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளை மலேசியாவில் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் மலேசியா வெளிநாட்டுப் பார்வையாளர்களின் விருப்பமான இடமாக உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2026 தீபாவளிக் கண்காட்சிக்கு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24ஆவது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சி அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சிறப்பிக்கும் வகையிலும், பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பகிருங்கள்: