வணிக வளாகத்தில் ரகளை; வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகப் புகார்! 25 வயது பெண் அதிரடிக் கைது!

கோலாலம்பூர், நவம்பர் 4: கோலாலம்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, வாடிக்கையாளர்களுக்குத் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் 25 வயது பெண்ணைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

பண்டார் ஸ்ரீ டாமான்சாரா பகுதியில் இன்று மாலை சுமார் 5.40 மணியளவில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஹ்மத் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி வணிக வளாகத்திற்கு வந்த பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இருப்பதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, தலைநகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணைக் காவல்துறையினர் தேடி வருவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்தப் பெண் வணிக வளாகத்திற்கு வந்தவர்களைத் தள்ளிவிட்டுத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறைக்கு மூன்று புகார்கள் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

மேலும், அதே நாளில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் தொடர்பாகவும் காவல்துறைக்குப் புகார் கிடைத்துள்ளது. அதில், அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டு அடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிருங்கள்: