கோலாலம்பூர்: சரவாக், லோங் லெல்லாங் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்பான விசாரணையைத் தொடங்க, விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் (AAIB) குழு இன்று மிரிக்கு வரவுள்ளது.
இந்தக் குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் மிரியை வந்தடையும் என மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் உள்ள ஹெலிகாப்டர் சிதைவுகள், AAIB குழுவின் அறிவுறுத்தலின்படி அப்புறப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. சம்பவ இடமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த 18 பேருடன் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஹெலிகாப்டர், இன்று காலை 7 மணிக்கு மிரியிலிருந்து லோங் லெல்லாங் நோக்கிப் புறப்பட்டது.
மேலும், இரண்டு போலீஸ் ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் இணைகின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியை மிரி மருத்துவமனையில் போலீசார் மேற்கொள்ளவுள்ளனர். இதில், உயிரிழந்தவர்களின் DNA மாதிரிகள் அவர்களது குடும்பத்தினரின் மாதிரிகளுடன் ஒப்பிடப்படும்.
நேற்று, ஐந்து பேரை ஏற்றிச் சென்ற Flying Doctor Service-ன் Bo-105 ரக ஹெலிகாப்டர், லோங் லெல்லாங் STOLport அருகே விபத்துக்குள்ளானதாக CAAM தெரிவித்திருந்தது.
