சுங்கை சிப்புட்: நாட்டில் நிலவும் மூடுபனி (ஜெரேபு) பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சுங்கை சிப்புட் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 3,300 முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த விநியோக நடவடிக்கையின் கீழ், மகாத்மா காந்தி கலாசாலை (MGK) தமிழ்ப்பள்ளிக்கு 600 முகக்கவசங்களும், ஹீவுட் தமிழ்ப்பள்ளிக்கு 600 முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
அதேபோல், டோவன்பி தமிழ்ப்பள்ளிக்கு 500 முகக்கவசங்களும், சாங்காட் சாலாக், துன் சம்பந்தன், சுங்கை ரெய்லா மற்றும் எல்பில் தமிழ்ப்பள்ளிகளுக்கு தலா 400 முகக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதன் மூலம், ஏழு தமிழ்ப்பள்ளிகளுக்கும் மொத்தம் 3,300 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூடுபனி காலத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, பள்ளி மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையில், இந்த விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனைப் பாதுகாப்பது என்பது கொள்கைகள் மற்றும் திட்டங்களை அறிவிப்பதுடன் நின்றுவிடாமல், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் அடங்கியுள்ளது என சுங்கை சிப்புட் பி.கே.ஆர். (KEADILAN) கிளைத் தலைவர் நவீன்தன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பதையும், மூடுபனி காலத்தில் பெற்றோரின் கவலையைக் குறைக்க இத்தகைய முயற்சிகள் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குழந்தைகளின் ஆரோக்கியம் நம் அனைவரின் பொறுப்பு” என்ற நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
