பினாங்கு குர்னி உணவுக் கூடத்திற்கு RM455,055 செலவில் கூரை மேம்பாட்டுப் பணிகள்!

பினாங்கு, பெர்சியாரான் குர்னி பகுதியில் அமைந்துள்ள உணவுக் கூடத்தின் கூரையை மேம்படுத்துவதற்காக RM455,055 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கூடத்தில், ஒன்பது உணவுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நான்கு தசாப்தங்களைக் கடந்துள்ள நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், பினாங்கு மாநகராட்சி மன்றத்தின் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்த காலம் மே 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், புதிய கூரை மற்றும் எஃகுக் கட்டமைப்பு அமைத்தல், கூரை வழியாக இயற்கை வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் வசதிகள், சுத்தம் செய்யும் வசதிகள், எண்ணெய்க் கழிவுகளைப் பிரிக்கும் அமைப்பு மற்றும் 26 புதிய இருக்கைத் தொகுதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், உணவுக் கூடத்தின் மின்சார வசதிகள், விளக்குகள் மற்றும் கடைகளுக்கான பெயர்ப் பலகைகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் வியாபாரிகள் சிறந்த சூழலில் வணிகம் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சுகாதாரமான மற்றும் வசதியான சூழலில் உணவருந்தவும் வழிவகுக்கும் என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் யாங் பெர்ஹார்மட் சியர்லீனா அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், உணவுக் கூடத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிருங்கள்: