கோலாலம்பூர், அக். 28: ஜோகூரில் B40 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் இணைய வசதியை மேம்படுத்தும் நோக்கில், ராஜா ஜரித் சோபியா ஜோகூர் மாநில அறக்கட்டளையும் (YRZSNJ), YTL கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து 5,000 இலவச YES 5G முன்பணம் செலுத்தும் சிம் அட்டைகளை வழங்குகின்றன.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வி மற்றும் நலனில் மாமன்னர் பெர்மாய்சூரி ராஜா ஜரித் சோபியா கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
RM100,000 மதிப்பிலான இத்திட்டம், ஜோகூர் டிஜிட்டல் இணைப்புத் திட்டத்தின் கீழ் YTL கம்யூனிகேஷன்ஸ், ராஜா ஜரித் சோபியா ஜோகூர் மாநில அறக்கட்டளை மற்றும் ஜோகூர் மாநிலக் கல்வித் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள YTL கோபுரத்தில் நடைபெற்றது. இதில் YTL கம்யூனிகேஷன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி விங் கே. லீ மற்றும் YRZSNJ தலைமைச் செயல் அதிகாரி ஹிஷாமுடின் அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், YTL கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைமைச் செயல் அதிகாரி ஜேக்கப் இயோ கியோங் இயோ, சந்தைப்படுத்தல் தலைவர் சாய் வான் நீ மற்றும் YRZSNJ நிறுவனத்தின் பெருநிறுவனத் தொடர்பு மேலாளர் டாசன் இயாங் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு 50GB இலவச இணையத் தரவு
வீட்டிலிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதுடன், டிஜிட்டல் கல்வி வளங்களை மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில், ஒவ்வொரு சிம் அட்டையுடனும் 50GB அதிவேக இணையத் தரவு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஹிஷாமுடின் அப்துல் ரஹிம், இணைய வசதிகள் குறைவாகக் கிடைக்கும் B40 குடும்பங்களிடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் உதவும் என்றார்.
இதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்வது மேலும் சீராகவும் பயனுள்ளதாகவும் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், இலவச சிம் அட்டைகள் வழங்கப்படுவதன் மூலம் ஜோகூரைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்காமல் இருக்க ஓரளவுக்காவது உதவ முடியும் என YTL கம்யூனிகேஷன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி விங் கே. லீ நம்பிக்கை தெரிவித்தார்.




மூலம் : Instagram / @officialsultanibrahim
