பள்ளி ஆலோசனை அறையில் கொள்ளை: RM11,950 மதிப்பிலான பொருட்கள் மாயம்!

சுங்கை சிப்புட்: தாமான் ஓர்கிட் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் ஆலோசனை அறையில் புகுந்த மர்ம நபர், RM5,700 ரொக்கப் பணம், மூன்று மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவம், காலை 7.50 மணியளவில் 47 வயதுடைய பெண் ஆசிரியர் ஒருவர் அறை முழுவதும் அலங்கோலமாக இருப்பதைக் கண்டபோது தெரியவந்தது.

அவர் சக ஆசிரியரை அழைத்து அறையைப் பார்வையிட்ட பின்னர், பள்ளி முதல்வரிடம் தகவல் தெரிவித்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் மூன்று மடிக்கணினிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நிதியிலிருந்த RM3,000, சக மாணவர் வழிகாட்டி குழுவின் (PRS) RM2,000, மாணவர் நல நிதியின் RM700 மற்றும் RM250 மதிப்புள்ள வெளிப்புற ஹார்ட் டிஸ்க் ஆகியவை அடங்கும்.

மொத்த இழப்பு RM11,950 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலும் சில பொருட்கள் காணாமல் போயுள்ளனவா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் சரண் ஐ வான் கூறுகையில், அறையின் கதவு மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரியின் கதவு உடைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி, தொப்பி மற்றும் கையுறைகள் அணிந்த ஒருவர் சம்பவ இடத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முன்பு, அக்டோபர் 24ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அந்த அறை கடைசியாகப் பயன்படுத்தப்பட்டு, பூட்டப்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட கைரேகைச் சோதனையில் அறையின் நுழைவுக் கதவில் ஒரு கைரேகை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அறைக்குள் வேறு கைரேகைகள் எதுவும் கிடைக்கவில்லை.

பள்ளியின் பாதுகாப்புக் காவலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படும் நேரத்தில் சந்தேகத்திற்கிடமான எதையும் கவனிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை அறை பாதுகாப்புக் காவலர் அறையிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், கட்டடத்தின் முன்புறத்தில் உயரமான சுவர் இருப்பதால் அந்த அறையை எளிதில் பார்க்க முடியாத நிலை காணப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை அடையாளம் காணும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 457ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

பகிருங்கள்: