வில்மார் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 281 மில்லியன் டாலர்

சிங்கப்பூர், அக். 30 : வில்மார் இன்டர்நேஷனல் நிறுவனம், 2026ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 281 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் 347.7 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர இழப்பைச் சந்தித்திருந்தது.

கடந்த ஆண்டு இந்தோனேசிய அரசாங்கத்துக்கு வழங்கிய 712.3 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு காரணமாக நிறுவனம் நிகர இழப்பைப் பதிவு செய்திருந்தது.

எனினும், அந்த ஒருமுறைச் செலவைக் கணக்கில் கொள்ளாமல் ஒப்பிடும்போது, இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 22.9 விழுக்காடு குறைந்துள்ளது. அடிப்படைச் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த நிகர லாபமும் 25.2 விழுக்காடு சரிந்து 267.3 மில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

இதற்கிடையில், நிறுவனத்தின் வருவாய் 13.6 விழுக்காடு அதிகரித்து 21.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

அதிகரித்த மூலப்பொருள் செலவுகள் உணவுப் பொருட்கள் பிரிவைப் பாதித்தன. மேலும், சோயாபீன் பிழிதல் லாப வரம்பு குறைந்ததால் தீவனம் மற்றும் தொழில்துறைப் பொருட்கள் பிரிவிலும் பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள சோயாபீன் முதலீடுகளின் செயல்திறன் குறைந்ததும் நிறுவனத்தின் லாபத்தைப் பாதித்தது.

2026ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நிறுவனத்தின் நிகர லாபம் 889.9 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 259.9 விழுக்காடு அதிகமாகும். அதேவேளை, இந்தக் காலப்பகுதிக்கான வருவாய் 15.9 விழுக்காடு உயர்ந்து 60.2 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

எதிர்வரும் காலங்களில் மூலப்பொருள் செலவுகள் அதிகரிப்பு, பொருட்களின் விலை உயர்வு மற்றும் உலகளாவிய விநியோகத் தடைகள் காரணமாக வணிகச் சூழல் சவால்மிக்கதாக இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இருப்பினும், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மூலம், ஆண்டின் எஞ்சிய காலத்தில் திருப்திகரமான செயல்திறனைப் பதிவு செய்ய முடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டம் தொடர்பாக, தேசிய சுற்றுச்சூழல் முகமை அக்டோபர் 23ஆம் தேதி வில்மார் இன்டர்நேஷனல் உட்பட 10 நிறுவனங்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் மற்றும் எல்லை தாண்டிப் பரவும் புகைமூட்டம் காரணமாகத் தனது செயல்பாடுகள், நிதிநிலை அல்லது சட்டரீதியான விவகாரங்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என்றும், எதிர்காலத்திலும் அத்தகைய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் வில்மார் தெரிவித்துள்ளது.

நிதி முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, வில்மார் நிறுவனத்தின் பங்குகள் 0.6 விழுக்காடு உயர்ந்து 3.27 சிங்கப்பூர் டாலரில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

பகிருங்கள்: