அக்டோபர் 30 : மலேசிய MADANI அரசாங்கத்திற்கும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சிக்கும் (பெர்சத்து) மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று கையெழுத்திடப்பட்ட நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தம் (Confidence and Supply Agreement – CSA), நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், அரசாங்க நிர்வாகத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், மக்களின் நலன்களை முன்னிறுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் இருப்பது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் முதிர்ச்சியின் அடிப்படையில், அனைத்துத் தரப்பினரும் குறுகிய அரசியல் நலன்களைக் காட்டிலும் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மலேசியாவில் அமைதி, அரசியல் நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தைத் தொடர்ந்து நிலைநாட்டுவதுடன், மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்தப் புரிந்துணர்வு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கான அடித்தளமாக அமையும் என்றும், ஜனநாயகச் செயல்முறைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், அனைவருக்கும் சிறந்த மலேசியாவை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகளையும் திறக்கும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



மூலம்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் (Facebook) பதிவு.
