அபி சோய் கொலை வழக்கு: உடலைச் சட்டவிரோதமாக அகற்றியதை ஒப்புக்கொண்ட முன்னாள் மாமனார்!

ஹொங்கொங், அக்டோபர் 31 : கொலை செய்யப்பட்ட ஹொங்கொங் சமூகப் பிரபலமும் மாடலுமான அபி சோயின் உடலைச் சட்டவிரோதமாக அகற்றிய குற்றச்சாட்டை அவரது முன்னாள் மாமனார் குவாங் காவ் (68) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

ஹொங்கொங் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொலை வழக்கின் ஐந்தாவது வார விசாரணையின்போது, முன்னதாகக் குற்றச்சாட்டை மறுத்து வந்த அவர், வெள்ளிக்கிழமை தனது நிலைப்பாட்டை மாற்றி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, 28 வயதான அபி சோய் கொலை செய்யப்பட்டதாகவும், தாய் போவின் லுங் மேய் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் அவரது உடல் துண்டிக்கப்பட்டு சட்டவிரோதமாக அகற்றப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குவாங் காவ், அவரது மகன்களான அந்தோனி குவாங் (35), அபி சோயின் முன்னாள் கணவர் அலெக்ஸ் குவாங் (31) ஆகிய மூவரும் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அவரது இரு மகன்களும் அப்பி சோயின் உடலைச் சட்டவிரோதமாக அகற்றிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தனர். தற்போது தந்தையும் அதே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும், மூவரும் கொலைக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, அபி சோயின் உடலைச் சட்டப்பூர்வமாக அடக்கம் செய்வதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டதாகவும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.இந்த வழக்கின் விசாரணை ஹொங்கொங் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பகிருங்கள்: