பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 2 : மலேசியாவில் பிரபலமான BananaBro மற்றும் Boat Noodle உணவகச் சங்கிலிகளை உருவாக்கிய தொழில்முனைவர் டோனி லிம் காலமானார்.
அவரது மறைவு குறித்த இரங்கல் செய்திகளை இரு உணவக நிறுவனங்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் திங்கட்கிழமை (நவம்பர் 2) வெளியிட்டன.
மலேசியாவின் பாரம்பரிய வாழையிலை உணவு முறையை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்த டோனி லிம்மின் பங்களிப்பைப் பாராட்டி BananaBro நிறுவனம் இரங்கல் அறிக்கை வெளியிட்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“அவர் இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், நாம் வழங்கும் ஒவ்வொரு வாழையிலை உணவிலும், அவர் ஆற்றிய ஒவ்வொரு பங்களிப்பிலும் அவரது கனவு தொடர்ந்து வாழும்.
“நன்றி டோனி. உங்களுடைய ஆர்வம் எங்களுக்கு உத்வேகம் அளித்தது. உங்களுடைய தாராள மனப்பான்மை எங்கள் இதயங்களைத் தொட்டது. நீங்கள் விட்டுச் சென்ற மரபு என்றும் நிலைத்திருக்கும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய உணவுத்துறையில் தனி முத்திரை
2014ஆம் ஆண்டு Boat Noodle உணவகத்தைத் தொடங்கியதன் மூலம் டோனி லிம் மலேசிய உணவு மற்றும் பானத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
தாய்லாந்தின் தெருவோர உணவுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Boat Noodle, சிறிய கிண்ணங்களில் நூடுல்ஸ் பரிமாறும் தனித்துவமான உணவு முறையை மலேசியர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு BananaBro உணவகச் சங்கிலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
பாரம்பரிய வாழையிலைச் சாப்பாட்டு முறையை நவீன அணுகுமுறையுடன் அறிமுகப்படுத்திய BananaBro, குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களிடையே பிரபலமடைந்தது.
நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிளைகளாக விரிவடைந்த இந்நிறுவனம், 2023ஆம் ஆண்டில் சுமார் RM70 மில்லியன் வருவாயைப் பதிவு செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய உணவுத்துறையில் புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதுடன், தனது ஊழியர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகளின் நலனிலும் அக்கறை செலுத்திய டோனி லிம்மின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
