12 வயது சிறுமியுடன் தகாத உறவு: 21 வயது வரை ஹென்றி கர்னி பள்ளியில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு

புத்ராஜெயா, நவம்பர் 3 : தனது 12 வயது மருமகளுடன் தகாத உறவு கொண்டு, அவருக்குக் குழந்தை பிறக்கக் காரணமான 19 வயது உணவக ஊழியரை, 21 வயதை அடையும் வரை ஹென்றி கர்னி பள்ளியில் தடுத்து வைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குற்றம் நடந்தபோது 17 வயதாக இருந்த அவருக்கு விதிக்கப்பட்ட 120 மணி நேர சமூகச் சேவைத் தண்டனையை மாற்றி, அரசுத் தரப்பு செய்த மேல்முறையீட்டை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக அனுமதித்தது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, பெர்லிஸ் மாநிலம் கோலா பெர்லிஸில் உள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது குற்றவாளிக்கு 15 வயதாக இருந்தது. வேதியியல் துறையின் டிஎன்ஏ பரிசோதனையில், பிறந்த குழந்தைக்கு அவரே உயிரியல் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு சாதாரண குற்றமல்ல என்றும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

முன்னதாக, சிறுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவருக்கு ஆறு மாதங்களில் 120 மணி நேர சமூகச் சேவை, இரண்டு ஆண்டுகள் சமூக நலத்துறை கண்காணிப்பு மற்றும் மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகும் நன்னடத்தைப் பிணை ஆகிய தண்டனைகளை விதித்திருந்தார். அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் அரிப் அய்ஸுதீன் மஸ்ரோம், குற்றத்தின் தீவிரத்துக்கு ஏற்ற வகையில் தண்டனை இல்லை என வாதிட்டு, 21 வயது வரை ஹென்றி கர்னி பள்ளியில் தடுத்து வைக்கக் கோரினார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் இச்லீன் இஸ்மாயில், சிறுவர் சட்டம் 2001-இன் விதிமுறைகளின்படி ஆலோசகர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரியின் அறிக்கையைப் பரிசீலித்தே மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்ததாகத் தெரிவித்தார்.

பகிருங்கள்: